மதுரை - போடி இடையே மின்மயமாக்கல் பணிகள் முடிவடைந்து, இன்று முதல் சென்னையில் இருந்து போடிநாயக்கனூருக்கு வாரத்திற்கு மூன்று நாட்கள் மின்சார ரயில் இயக்கப்படும்.

போடிநாயக்கனூர் மின்சார ரயில்

பொதுமக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு பெரிதும் எதிர்பார்ப்பது ரயில் போக்குவரத்தை தான் அந்த வகையில், பாதுகாப்பு மற்றும் வசதிகள் கொண்ட பயணமாக ரயில் சேவை உள்ளது. இந்த நிலையில் தேனிமாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மீட்டர் கேஜ் பாதை அகற்றப்பட்டு சுமார் 436 கோடி ரூபாய் மதிப்பில் அகல ரயில் பாதை திட்டம் நிறைவேற்றப்பட்டது.

இதனையடுத்து கடந்த கடந்த 2022 ஆம் ஆண்டு மீண்டும் ரயில் சேவை துவக்கப்பட்டது. வாரத்தில் ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய மூன்று நாட்கள் போடிநாயக்கனூரில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கும், திங்கள், புதன் வெள்ளி ஆகிய மூன்று நாட்களில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து போடிநாயக்கனூருக்கும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

முடிவடைந்த மின் மயமாக்கல் பணிகள்

மேலும் மதுரையில் இருந்து போடிநாயக்கனூருக்கும், போடிநாயக்கனூரில் இருந்து மதுரைக்கும் தினசரி முன்பதிவுல்லா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னையில் இருந்து மதுரை வரை மின்சார ரயில் இயக்கப்பட்டு மதுரையில் இருந்து போடிநாயக்கனூருக்கு டீசல் ரயில் இயக்கப்படுகிறது. இதனால் கூடுதல் நேரம் பிடிப்பதால் பயணிகள் அவதி அடைந்துவந்தனர். இந்த நிலையில் தான் மதுரை -போடி இடையே மின் மயமாக்க ரூபாய் 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் ரயில் போக்குவரத்திற்கான சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

தொடங்கியது மின்சார ரயில் போக்குவரத்து

இதனையடுத்து இன்று முதல் சென்னையில் இருந்து காட்பாடி, நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை வழியே வாரத்திற்கு மூன்று நாட்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்படுள்ளது. மேலும் சென்னை அதிவிரைவு ரயில் மற்றும் மதுரையில் இருந்து தினசரி போடிநாயக்கனூருக்கு இயக்கப்படும் பேசஞ்சர் ரயில் ஆகிய இரண்டுமே ஒரே நாளில் மின்சார ரயிலாக மாற்றப்பட்டு பயணிகள் போக்குவரத்து தொடங்கியுள்ளது. மதுரையில் இருந்து சுமார் 85 முதல் 90 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மின்சார ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.