எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் தோல்வியை சந்தித்த நிலையில் வரும் தேர்தலுக்கு முன்பாக கழகம் ஒன்றுபட வேண்டும்.

அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவருமான, முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் இன்று தனது கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின்னர் அதிமுக.வில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவைத் தொடர்ந்து தற்போது எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக இருந்து வருகிறார். எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என பல தேர்தல்களை சந்தித்துவிட்டோம்.

ஆனால் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு தேர்தலில் கூட நாம் வெற்றிபெறவில்லை. 2024 தேர்தலில் பாஜக.வுடன் கூட்டணி அமைநத்து தேர்தலை சந்தித்திருந்தால் 30 இடங்களில் வெற்றி பெற்றிருக்க முடியும். ஆனால் அது நடைபெறவில்லை.

கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் ஒன்றுபட வேண்டும். எடப்பாடியின் யூகங்கள், வியூகங்கள் எடுபடவில்லை. ஆகவே வரக்கூடிய தேர்தலுக்கு முன்பாக கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்”.