EPS ADMK : சிறுபான்மையினர் மக்களின் நம்பிக்கையை பெற முடியவில்லையே.. எடப்பாடியிடம் புலம்பிய அதிமுக நிர்வாகிகள்
சிறுபான்மையின மக்களின் நம்பிக்கையை பெற அதிமுகவினர் இன்னும் கூடுதலாக உழைக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி அக்கட்சியின் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அதிமுகவில் அதிகார மோதல்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் உட்கட்சி மோதல் தலைவிரித்தாடுகிறது. சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் என அடுத்தடுத்து மூத்த தலைவர்கள் நீக்கப்பட்டனர். இதனால் சரியான தலைமை இல்லாமல் அதிமுக திணறியது. இதனையடுத்து கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜகவுடன் கூட்டணி அமைத்தது. அதே நேரத்தில் நாடாளுமன்றத்தில் சிறுபான்மையினர் மக்களுக்கு எதிராக பாஜக கொண்டு வந்த தீர்மானத்திற்கு அதிமுக நேரடியாக ஆதரவு தெரிவித்தது. இதனால் சிறுப்பான்மையின மக்கள் அதிமுக மீது அதிருப்தி அடைந்தனர். சட்டமன்றம், உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்றம் என அனைத்து தேர்தல்களிலும் அதிமுகவிற்கு எதிராக சிறுபான்மையினர் வாக்குகளை செலுத்தினர்.
பாஜக கூட்டணி- சிறுபான்மையினர் அதிருப்தி
இதனையடுத்து தான் பாஜக கூட்டணியில் தொடர்ந்தால் தமிழகத்தில் சிறுபான்மையினர் வாக்குகளை பெற முடியாத என்ற காரணத்தால் கூட்டணியில் இருந்து அதிமுக திடீரென வெளியேறியது. இருந்த போதும் அதிமுகவிற்கு மக்களவை தேர்தலில் சிறுபான்மையினர் மக்கள் வாக்களிக்கவில்லை. இந்தநிலையில் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பெற்ற படுதோல்வி தொடர்பாக ஒவ்வொரு தொகுதி வாரியாக எடப்பாடி பழனிசாமி அதிமுக நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து மயிலாடுதுறை நாகப்பட்டினம் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி நிர்வாகிகளின் கருத்துகளை கேட்டறிந்தார். அப்போது தோல்விக்கான காரணம் என்ன.? கட்சி தொண்டர்கள் மன நிலை என்ன என்பது தொடர்பாக கேள்விகளை கேட்டார்.
பாஜகவுடன் கூட்டணி கிடையாது
அப்போது ஆலோசனை கூட்டத்தில் பேசிய மயிலாடுதுறை தொகுதி நிர்வாகிகள் , பாஜக கூட்டணியில் இருந்து விலகினாலும் சிறுபான்மையினர் வாக்குகளை ஈர்க்க முடியவில்லை என தெரிவித்துள்ளனர். மேலும் பாஜக- அதிமுக மறைமுக கூட்டணி என்ற எண்ணம் மக்களிடையே தற்போதும் உள்ளதாக தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, பாஜக உடன் வரும் நாட்களிலும் கூட்டணி கிடையாது எனவும், 2026 சட்டமன்ற தேர்தலில், அதிமுக வலுவான கூட்டனி அமைக்கும் என தெரிவித்துள்ளார். மேலும், சிறுபான்மையின மக்கள் மனநிலை எதிர்காலத்தில் மாறும் ,தொண்டர்கள் யாரும் துவண்டு விட வேண்டாம் எனவும், சிறுபான்மையின மக்களின் நம்பிக்கையை பெற தொடர்ந்து உழைப்போம் என அறிவுறுத்தியுள்ளார்.
அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டதற்கு இது தான் காரணம்.! புதிய குண்டை தூக்கிப்போட்ட செல்லூர் ராஜூ