மதுரை செக்கானூரணி பகுதியில் உள்ள அரசு மாணவர் விடுதியில் மாணவர்கள் இடையே தாக்குதல் ஏற்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிப்பதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் அரசின் சமூக நீதி விடுதியில் மாணவர் ஒருவர் ஆடைகள் அவிழ்க்கப்பட்டு சீனியர் மாணவர்களால் ரேகிங் கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், “மதுரை செக்கானூரணி பகுதியில் உள்ள அரசு மாணவர் விடுதியில் மாணவர்கள் இடையே தாக்குதல் ஏற்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இந்த மாணவர் விடுதியில் ஆசிரியர் நியமனம் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்று செய்திகள் வருகின்றன.
அரசு விடுதியில் ஒரு மாணவனை நிர்வாணப்படுத்தி, செருப்பால் அடித்து தாக்கப்படுவதை இந்த பொம்மை முதல்வரால் Justify செய்துவிட முடியுமா? "சமூகநீதி விடுதிகள்" என்று பெயர் வைப்பதால் வருவது அல்ல. அந்த விடுதிகளின் நிர்வாகத்திலும், செயல்பாட்டிலும் சமூகநீதி என்பது இருக்க வேண்டும். இதனை பொம்மை முதல்வர், அவர் தலைமையிலான விளம்பர மாடல் அரசும் எப்போது தான் உணரப் போகிறது?
அரசு விடுதியில் உள்ள மாணவர்களுக்கு இடையே கூட இணக்கமான சூழலை அமைத்திட முடியாத அரசாக இன்றைய விடியா திமுக அரசு இருப்பது வெட்கக்கேடானது. அரசு விடுதிகள் தான் இப்படி என்றால், இந்த ஆட்சியில் அரசுப்பள்ளிகளுமே பாதுகாப்பற்ற நிலையில் தான் இருக்கின்றன. திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் ஓராண்டுக்கு முன் புதிதாக கட்டப்பட்ட அரசுப்பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்ததாக செய்திகள் வந்தன.
மாணவர்கள் உள்ளே இருந்திருந்தால் அவர்கள் உயிருக்கே ஆபத்தாகி இருக்காதா? பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் நடந்த இந்த அவலத்திற்கு என்ன பதில் வைத்துள்ளது இந்த ஸ்டாலின் மாடல் அரசு? திமுக அரசின் கலெக்ஷன்- கமிஷன்- கரப்ஷன் கொள்ளைக்கு, மாணவர்கள் உயிரை பணயம் வைப்பது கண்டனத்திற்குரியது.
கல்வி ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்கும். ஒழுக்கம், சமத்துவத்தை நிலைநாட்ட வழிவகுக்கும். இந்த ஸ்டாலின் மாடல் ஆட்சி, கல்வி மற்றும் அதற்கான கட்டுமான வசதிகள் உள்ளிட்ட அடிப்படையான விஷயங்களை நெறிப்படுத்த முடியாததால் தான் இத்தகைய பிரச்சனைகள் வருகின்றன.
நடந்து செல்வதை Reels போடுவதில் இருக்கும் முனைப்பை, மாணவர்களுக்கு சுய ஒழுக்கத்தைப் பேணும் கல்வியை வழங்குவதை உறுதி செய்வதிலும், அரசுப்பள்ளிகளைத் தரமாகக் கட்டமைப்பதிலும், அரசு மாணவர் விடுதியில் ஆசிரியர் நியமனம் மேற்கொண்டு முறையாக நிர்வகிப்பதிலும் காட்ட வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
