திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். திண்டிவனத்தில் நடந்த பாலியல் சீண்டல் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டதாகவும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்வதாகவும் குற்றம்சாட்டிய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இதனைக் கண்டித்து திண்டிவனத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சட்டம்-ஒழுங்கு சீர்கேடு
தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதல் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் வன்கொடுமைகள் தமிழ்நாட்டில் தொடர்கதையாகிவிட்டன. பெண்கள் வெளியில் நடமாடவே அச்சப்படும் அளவிற்கு, இந்த ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளது.
பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமைகள், போதைப் பொருட்களின் புழக்கம் மற்றும் கடத்தல், சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள், சிறார்கள் மற்றும் இளைஞர்கள் போதையின் பிடியில் சிக்கி குற்றச் செயல்களில் ஈடுபடுவது போன்ற மக்கள் விரோதச் செயல்கள் தொடர்கின்றன.
குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் சட்டம் மீதோ, காவல்துறையின் மீதோ எவ்வித அச்சமும் இன்றி செயல்படுகின்றனர். நிர்வாகத் திறனற்ற தி.மு.க. அரசு தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கை குழிதோண்டிப் புதைத்துவிட்டது.
தொடர்ந்து அறிக்கைகள், ஊடகப் பேட்டிகள் மற்றும் சட்டமன்றம் வாயிலாக வலியுறுத்தியும், இதுவரை நிர்வாகத் திறனற்ற தி.மு.க. அரசு எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.
விலைவாசி உயர்வு
தி.மு.க. ஆட்சியில் மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றுவதில் எந்த அக்கறையும் காட்டவில்லை. மாறாக, பல்வேறு வரி உயர்வுகளை மக்கள் தலையில் சுமத்தியுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளதால், மக்கள் தங்கள் வாழ்க்கையை நடத்த முடியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர்.
சமீபத்தில், கோயம்புத்தூரில் கல்லூரி மாணவிக்கு எதிராக நடைபெற்ற கூட்டுப் பாலியல் வன்கொடுமை, அதேபோல், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பள்ளி மாணவியிடம் காவலர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் ஆகியவை தி.மு.க. ஆட்சிக் காலம் தமிழ்நாட்டின் வரலாற்றில் ஒரு கரும்புள்ளி என்பதை மீண்டும் மீண்டும் மெய்ப்பிப்பதாக எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழ்நாட்டில் பெருகிவரும் பாலியல் வன்கொடுமை, போதைப் பொருள் கலாசாரம், சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் மற்றும் திண்டிவனத்தில் நிகழ்ந்த பாலியல் சீண்டல் உள்ளிட்ட மகளிர் விரோத, மக்கள் விரோதச் செயல்களைக் கட்டுப்படுத்தத் தவறிய தி.மு.க. அரசைக் கண்டித்து, மாவட்ட மகளிர் அணியின் சார்பில் 14.11.2025 வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில், திண்டிவனம் காந்தி சிலை அருகில், கழக அமைப்புச் செயலாளரும், விழுப்புரம் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சிவி சண்முகம், தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கழக நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், மகளிர் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு எடப்பாடி பழனிசாமி அன்போடு கேட்டுக்கொண்டுள்ளார்.


