எடப்பாடி பழனிசாமி எப்படிபட்டவர் தெரியுமா? சத்தியபாமா சொன்ன பகீர் தகவல்!
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆதரவாளரான முன்னாள் எம்.பி. சத்தியபாமா கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார். பணம் இருந்தால் மட்டுமே கட்சியில் வாய்ப்பு வழங்கப்படுவதாக வேதனை தெரிவித்த அவர், திமுகவை வீழ்த்த அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

முன்னாள் எம்.பி. சத்தியபாமா
கோபிசெட்டிபாளையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு ஆதரவாக இருந்த முன்னாள் எம்.பி. சத்தியபாமா உள்பட 14 பேர் அடிப்படைக் கட்சி பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர். முதலில் செங்கோட்டையன் பேட்டியளித்த போது எடப்பாடி பழனிசாமி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதனையடுத்து முன்னாள் எம்.பி. சத்தியபாமா செய்தியாளர்களுக்கு பேட்டிளிக்கையில்: அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலக்கப்பட்டு உள்ளேன். இது உண்மையிலே வருத்தம் அளிக்கிறது. நான் ஒரு சாதாரண உறுப்பினராக இருந்து தொண்டராக இருந்து பணியாற்றி வந்தேன். எவ்வளவோ கழக மூத்த நிர்வாகிகள் இருந்தாலும் கூட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உழைக்கின்றவர்களுக்கு பதவியை வழங்கினார்கள். நான் 2000ஆண்டில் இருந்து கழக உறுப்பினராக இருந்து வருகிறேன். 2001 நகர மன்ற உறுப்பினராகவும் துணைத்தலைவராகவும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
பல்வேறு கட்சிகளில் இருந்து அழைப்பு
அதற்குப் பிறகு 2007 மாவட்ட மகளிர் அணி செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டது. 2011ல் கோபி ஒன்றியம் குழு உறுப்பினராக வாய்ப்பு அளிக்கப்பட்டது, 2014 இல் திருப்பூர் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டேன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு நான் வெற்றி பெற்றேன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு பல்வேறு தரப்பிலிருந்து எனக்கு வாய்ப்புகள் வந்தாலும் கூட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொடுத்த வாய்ப்பை நான் நினைத்துப் பார்த்து எங்கேயும் செல்லவில்லை..
பணம் இருந்தால் தான் வாய்ப்பு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கழகத்திற்காக உழைத்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தார். இந்த முறை பாராளுமன்ற உறுப்பினருக்கான வாய்ப்பை தலைமையிடம் கேட்டேன், பணம் இருந்தால் தான் வாய்ப்பு என்று நான் அறிந்தேன் அது மிகவும் வேதனை அளிக்கிறது. கட்சி நன்றாக இருக்க வேண்டும் என்று இன்று வரை நாங்கள் அமைதியாக இருக்கிறோம் நாங்கள் என்ன தவறு செய்தோம், திமுகவை வீழ்த்த வேண்டும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் எண்ணத்தை நிறைவேற்ற வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அதிமுகவிற்காக எத்தனை தியாகங்களை செய்தார்.
ஒன்று சேர்ந்தால் மட்டும் தான் வெற்றி
ஒரு பெண்ணாக இருந்து திமுகவை எதிர்த்து பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டார் அவர்தான் எங்களுக்கு ரோல் மாடலாக இருந்தார். தங்கள் நகைகளை எல்லாம் விற்று கட்சிக்காக செலவு செய்தார். கட்சி நன்றாக இருக்க வேண்டும் என்று குரல் கொடுப்பதற்காக நாங்கள் அனைவரும் நீக்கப்பட்டுள்ளோம் இது என்ன நியாயம். அதிமுகவில் இருக்கக்கூடியவர்கள் எங்களிடம் பேசிக் கொண்டுதான் உள்ளனர். அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்த எங்களை விலக்கி விடுவார்கள் என்பதால் எங்களால் வெளியே சொல்ல முடியவில்லை என்கின்றனர். ஒன்று சேர்ந்தால் மட்டும்தான் அதிமுக வெற்றி பெற முடியும் என்பது அனைவருக்கும் தெரியும். அனைவரும் ஒன்றிணை வேண்டும் என்ற நோக்கத்தை நாங்கள் முன்னெடுத்துள்ளோம் நிச்சயமாக நல்லது நடக்கும் என தெரிவித்துள்ளார்.