புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டு சகோதரர்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார் கோவில் காமராஜர் நகரை சேர்ந்தவர் காட்டமுத்து. இவரது மகன்கள் தான் கண்ணன் (32). இளைய மகன் கார்த்திக் (28). கண்ணனுக்கு திருமணமாகி பிரியா என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு குளக்கரையில் அமர்ந்து கண்ணன் மது அருந்தி கொண்டிருந்தார். அவரது அருகில் தம்பி கார்த்திக்கும் இருந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் கண்ணணை சரமாரியாக வெட்டியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தம்பி கார்த்திக் தடுக்க முயன்ற அவரையும் அந்த கும்பல் வெட்டியது. ரத்த வெள்ளத்தில் சரிந்த இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். இதனையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பித்து சென்றது.
இந்த சம்பவம் தொடர்பாக ஆவடியார் கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இரட்டை கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி சம்பந்தப்பட்ட உறவினர்கள் ஆவடியார் கோவில் காவல் நிலையம் முன்பு சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டதும் இல்லாமல் பதற்றம் ஏற்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு குற்றவாளி விரைந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் உறுதியளித்தனர். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சட்டமன்ற தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் செய்து மக்களை நேரில் சந்தித்து வருகிறார். அதன்படி 15-வது நாளான நேற்று இன்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அந்த மாவட்டத்தில் இரட்டை கொலை நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
