சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தவெக இருக்காது என்று அதிமுக மூத்த தலைவர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். விஜய்க்கு எந்த நெருக்கடியும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

கரூர் விவகாரத்தில் இக்கட்டான நிலையில், அதிமுகவும், பாஜகவும் தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக நின்றன. இந்த விஷயத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தினார். இதனால் தவெக தொண்டர்கள் எடப்பாடி பிரசாரத்துக்கு தவெக கொடிகளுடன் சென்றனர்.

நெருக்கடி கொடுப்பதாக விஜய் பேச்சு

இதன் காரணமாக தேர்தலில் தவெக, அதிமுக கூட்டணி வைக்கும் என பேச்சு அடிபட்டது. ஆனால் தவெக தலைமையில் தான் கூட்டணி. விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என தவெக அதிரடியாக அறிவித்தது. நேற்று பொதுக்குழுவில் பேசிய விஜய்யும் தவெகவுக்கும், திமுகவுக்கும் இடையே தான் போட்டி என்று அதிரடியாக அறிவித்தார். மேலும் எந்த கட்சிக்கும் இல்லாத வகையில் தவெகவுக்கு தமிழக அரசு கடும் நெருக்கடி கொடுப்பதாகவும் விஜய் கூறியிருந்தார்.

திமுக வந்தால் தவெக இருக்காது

இந்த நிலையில், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தவெக என்ற கட்சியே இருக்காது என்று முன்னாள் அமைச்சரும், அதிமுக மூத்த தலைவருமான செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் செல்லூர் ராஜு கூறுகையில், ''எம்.ஜி.ஆர் அதிமுகவை ஆரம்பித்தபோது கலைஞர் கருணாநிதி நிர்வாகிகளை கைது செய்து கட்சியை முடக்க பார்த்தார்.

விஜய்யால் நடிக்கவும் முடியாது

அதனை ஒப்பிட்டு பார்த்தால் விஜய்க்கு நெருக்கடி ஏதும் இல்லை. ஆனால் தேர்தலில் வெற்றி பெற்று திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்து விட்டால் தவெக என்ற கட்சி இருக்காது. அப்படி நடந்தால் விஜய் மீண்டும் படங்களில் நடிக்கப் போய் விடுவார். ஆனால் தியேட்டர்கள் எல்லாம் திமுக வசம் உள்ளதால் அவரால் மீண்டும் நடிக்க முடியுமா? என்றும் சொல்ல முடியாது'' என்றார்.

எம்.ஜி.ஆர் போல் விஜய் முடிவெடுக்கணும்

தொடர்ந்து பேசிய செல்லூர் ராஜு, ''கடந்த காலங்களில் மக்கள் நலனுக்காவும், தொண்டர்கள் நலனுக்காகவும் எம்.ஜி.ஆர் மத்திய அரசுடன் கூட்டணி வைத்திருந்ததாக கூறினார். இதே போல் விஜய்யும் இதை நினைவில் கொண்டு முடிவு எடுக்க வேண்டும்'' என்றார்.

மேலும் செங்கோட்டையன் நீக்கம் குறித்து பேசிய செல்லூர் ராஜு, ''மூத்த தலைவரான செங்கோட்டையன் தனது மனக்குமுறல்களை ஈகோ பார்க்காமல் பொதுச்செயலாளரிடம் சொல்லி இருக்க வேண்டும். ஆனால் அதை விட்டு கட்சிக்கு எதிரானவர்களுடன் இணைந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தால் சரியாக இருக்குமா?'' என்று கேள்வி எழுப்பினார்.