தன்னுடைய செலவில் செல்லூர் ராஜு பொறுப்பில் இருக்கிற தொகுதிகளில் கூட்டத்தைக் கூட்டி பிரச்சாரத்தை பிரமாண்டப்படுத்தினாராம் வேலுமணி. செல்லூர் ராஜு கைவிரித்ததை எடப்பாடி பழனிச்சாமி சீரியஸாக எடுத்துக்கொண்டுள்ளாராம்.

அ.தி.மு.க.வில் உள் கட்சி விவகாரம் வெடித்து வருகிறது. அதிமுக மூத்த நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி மீடு அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் நிலையில் செங்கோட்டையன் 5ம் தேதி மனம் திறந்து பேச உள்ளதாகக் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜுவும் அதிருப்தியில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

விஜய் மாநாட்டுக்கு பிறகு மதுரைக்கு பிரச்சாரத்துக்கு வந்த எடப்பாடி பழனிச்சாமி பிரமாண்ட கூட்டத்தை காட்ட வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டு இருக்கிறார். எல்லா பிரச்சாரத்திலும் இபிஎஸ் செல்லும் முன்பே அந்த இடத்திற்கு சென்று அந்தந்த தொகுதி மாவட்ட நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்துவார் எஸ்.பி.வேலுமணி. மதுரை பிரச்சாரத்தை ஸ்பெஷலாக்க வேண்டும் என்று நினைத்த வேலுமணிக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சொன்ன பதில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருக்கிற முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பொறுப்பில் மதுரை மத்திய, வடக்கு, தெற்கு சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. ஆனால் என்னுடைய ஒரு தொகுதியில் மட்டும்தான் எடப்பாடி பழனிசாமி வரும்போது கூட்டத்தை கூட்ட முடியும். பொருளாதாரம் எல்லாம் என்னிடம் இல்லை என்று வெளிப்படையாக சொல்லி இருக்கிறார் செல்லூர் ராஜூ. 10 வருடம் அமைச்சராக இருந்தவர் முக்கியமான கட்டத்தில் பொதுச் செயலாளர் வருகிற போது கையை விரிக்கிறார் என்று எஸ்.பி.வேலுமணி கட்சிக்காரர்களிடம் புலம்பியுள்ளார்.

கூடவே தன்னுடைய செலவில் செல்லூர் ராஜு பொறுப்பில் இருக்கிற தொகுதிகளில் கூட்டத்தைக் கூட்டி பிரச்சாரத்தை பிரமாண்டப்படுத்தினாராம் வேலுமணி. செல்லூர் ராஜு கைவிரித்ததை எடப்பாடி பழனிச்சாமி சீரியஸாக எடுத்துக்கொண்டுள்ளாராம். ஏற்கனவே கீழடிக்கு சென்ற போது தன்னுடைய காரில் ஏற வேண்டாம் என்று செல்லூர் ராஜுவிடம் எடப்பாடி சொன்னதையும், இவர்கள் இருவருக்கு இடையே ஏதோ ஒரு கருத்து வேறுபாடு இருப்பதாகவும், அது தேர்தல் சமயத்தில் சரியாகுமா? என்கிற சந்தேகத்தை மதுரை என்ற ரத்தத்தின் ரத்தங்கள் கிளப்புகிறார்கள்.