Arvind Kejriwal meets MK Stalin: டெல்லி அவசரச் சட்டத்தை கடுமையாக எதிர்ப்போம்! மு.க. ஸ்டாலின் உறுதி!!
சென்னையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி அவசரச் சட்டத்தை எதிர்க்க திமுக ஆதரவு அளிப்பதாக உறுதி அளித்துள்ளது என்றார்.
டெல்லியில் மாநில அரசின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள அவசரச் சட்டத்தை திமுக நாடாளுமன்றத்தில் கடுமையாக எதிர்க்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜிரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் இன்று சென்னை வந்துள்ளனர்.
ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த இரண்டு முதல்வர்களும் முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று மாலை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பிற்குப் பின், செய்தியாளர்களிடம் மூவரும் கூட்டாகப் பேட்டி அளித்தனர். அப்போது பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், டெல்லியில் மாநில அரசுக்கு மத்திய அரசு தொடர்ந்து நெருக்கடி கொடுத்துவருகிறது என்றும் டெல்லி அரசுக்கு தொல்லை கொடுக்கும் வகையில் செயல்படும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள அவசரச் சட்டத்தை திமுக கடுமையாக எதிர்க்கும் என்றும் தெரிவித்தார்.
புதிய உச்சத்தில் ஜிஎஸ்டி வருவாய்... மே மாத வசூல் 1.57 லட்சம் கோடி! தமிழ்நாடுக்கு 4வது இடம்!
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழகத்தில் புதுமைப்பெண் திட்டம் தொடங்கப்பட்டபோது அந்த விழாவுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக வருகை தந்ததையும் மு.க. ஸ்டாலின் நினைவுகூர்ந்தார். கெஜ்ரிவால் அவர்களும் தானும் நீண்டகாலமாக நட்புடன் பழகிவருவதாகவும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், டெல்லி அவசரச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் தோற்கடிக்க திமுக ஆதரவு அளிப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி அளித்துள்ளதாகத் தெரிவித்தார். பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பேசுகையில், மத்திய அரசு பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் ஆட்சியை நடத்தப் பார்க்கிறது என்றும் பஞ்சாப்பில் பட்ஜெட் கூட்டத்தொடரைக் கூட்டுவதற்குக்கூட உச்ச நீதிமன்றத்தை நாடவேண்டிய நிலை உள்ளது என்றும் கூறினார்.
இந்த சந்திப்பு குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்த டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், மத்திய அரசின் அரசியல் சாசனத்துக்கு எதிரான, ஜனநாயக விரோதமான, ‘டெல்லி எதிர்ப்பு’ அரசாணைக்கு எதிராக திமுகவின் ஆதரவை பெறுவதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னையில் சந்திக்க உள்ளதாக அறிவித்திருந்தார்.
இந்த சந்திப்பு கடந்த மாதம் தொடங்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலின் நாடு தழுவிய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக நடந்துள்ளது. டெல்லியில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள அவசரச் சட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளை அணிதிரட்டும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார். பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாத மாநிலங்களவையில் அனைத்து எதிர்க்கட்சிகள் ஆதரவுடன் அவசரச் சட்ட மசோதாவைத் தோற்கடிக்கலாம் என ஆம் ஆத்மி அரசு நம்புகிறது.
இந்தத் தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதியாக அரவிந்த் கெஜ்ரிவால் நாளை (வெள்ளிக்கிழமை) ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை சந்திக்க உள்ளார்.
சேலம் பட்டாசு கிடங்கில் பயங்கர தீ விபத்து; பெண் உள்பட 3 பேர் உடல் கருகி பலி