Asianet News TamilAsianet News Tamil

ஆளுநரின் பேச்சின் பின்னனியில் பலத்த சந்தேகம்.!சதிச்சிந்தனைகளுக்கு தூபம் போடுகிறது-டி.ஆர்.பாலு ஆவேசம்

 சோமநாதர் கோவில் சொத்துகளை அழித்து கந்தகார், பெஷாவர் நகரங்களை கஜினி முகமது உருவாக்கினார். அந்த நகரங்கள் அமெரிக்க குண்டுகளால் தகர்க்கப்பட்டதில் இருந்து சனாதன தர்மத்தின் வலிமையை அறியலாம். என தமிழக ஆளுநர் பேசியது மதச்சார்பின்மைக்கு எதிராக இருப்பதாக திமுக பொருளாளர்  டி.ஆர் பாலு கண்டனம் தெரிவித்துள்ளார்.

DMK Treasurer Tr Balu condemns Governor of Tamil Nadu for making anti secular remarks
Author
Tamilnadu, First Published Jun 12, 2022, 3:11 PM IST

அமெரிக்காவால் தகர்க்கப்பட்ட கந்தகார்

சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, “வேற்றுமையில் ஒற்றுமை என நாட்டைப் பற்றி கூறுகிறோம். சனாதன தர்மமும் அதையேதான் கூறுகிறது. இந்தியாவில் ராணுவம், பொருளாதாரம் வளர்ச்சி அடைவதைப்போல ஆன்மீகத்திலும் வளர்ச்சி அவசியம். ஆன்மீகத்தில் வளர்ச்சி இந்தியாவின் வளர்ச்சியாக அமையும் என தெரிவித்து இருந்தார். மேலும்  ''சோமநாதர் கோவில் சொத்துகளை அழித்து கந்தகார், பெஷாவர் நகரங்களை கஜினி முகமது உருவாக்கினார். அந்த நகரங்கள் அமெரிக்க குண்டுகளால் தகர்க்கப்பட்டதில் இருந்து சனாதன தர்மத்தின் வலிமையை அறியலாம். ரிஷிகளாலும் முனிவர்களாலும் சனாதன தர்மத்தின் ஒளியினாலும் இந்த நாடு உருவாக்கப்பட்டது" என்று தமிழக ஆளுநர் பேசியிருந்தார். இதற்க்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்தநிலையில் திமுக பொருளாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், தமிழ்நாடு ஆளுநர் மாண்புமிகு ஆர்.என்.ரவி அவர்கள் சனாதன தர்மம் குறித்தும், வெடிகுண்டுத் தாக்குதல்களை நியாயப்படுத்தும் வகையிலும் பேசிய பேச்சுக்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆளுநர் அவர்களின் தனிப்பட்ட ஆன்மீக எண்ணங்கள் என்பவை அவரது தனிப்பட்ட விருப்பங்கள் ஆகும். அவற்றை விமர்சிக்க விரும்பவில்லை. அதேநேரத்தில் அரசியல் சட்டத்தின் நீதிநெறிமுறைகளுக்கு உட்பட்ட ஒரு பதவிநிலையில் இருக்கும் ஒருவர் தெரிவிக்கும் கருத்தானது அத்தகைய சட்டத்தின் நெறிமுறைகளுக்கு உட்பட்டதாகத்தான் அமைய வேண்டும். சட்டத்தை மீறியதாகவோ, சட்டத்தை மீறுவதாகவோ அமையக் கூடாது. இதனை ஆளுநர் அவர்கள் நன்கு அறிவார்கள் என நினைக்கிறேன்.

DMK Treasurer Tr Balu condemns Governor of Tamil Nadu for making anti secular remarks

ஆளுநர் பதவிக்கு அழகல்ல

 ஆளுநர் வகிக்கும் அரசியல் சட்டப் பதவிக்கு அழகல்ல.வெடிகுண்டு பாதையே சரி என்கிறாரா ஆளுநர்? யாருக்கு அவர் வழிகாட்டுகிறார்? ''இந்தியா என்பது இறையாண்மைமிக்க, சமதர்ம, சமயச் சார்பற்ற, ஜனநாயகக் குடியரசு நாடாக உள்ளது'' என்கிறது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரை. மாண்புமிகு ஆளுநரின் உரை என்பது, அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையைக் கிழித்தெறிவதாக அமைந்துள்ளது. சமயச்சார்பற்ற தன்மையைப் பிரதிபலிக்க வேண்டிய ஒருவர், ஒரு சமயத்தின் சார்பாளராகக் காட்டிக் கொள்வதையும் தாண்டி - மாற்று மதத்தினர் மீது மனவேறும் மாறுபாடும் கொள்ளக் கூடிய கருத்துக்களையும் - அதனை வன்முறைப்பாதையில் எதிர்கொள்ளலாம் என்ற தூண்டுதலையும் பொதுவெளியில் பேசுவது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது ஆகும். அமெரிக்கக் குண்டுகளால் இவை தகர்க்கப்பட்டதை நியாயப்படுத்தி கருத்துச் சொல்லி இருப்பது நாட்டில் உள்நாட்டுக் குழப்பத்தை ஏற்படுத்தும் சிந்தனை ஆகும். அமைதி தவழும் தமிழ்நாட்டில் இத்தகைய கருத்துகளை ஆளுநர் என்ற பொறுப்புள்ள பதவியில் இருக்கும் போது ஒருவர் சொல்வதன் பின்னணி பலத்த சந்தேகங்களையும் அச்சத்தையும் விதைப்பதாக உள்ளது. சிலரின் சதிச்சிந்தனைகளுக்கு ஆளுநரின் இந்தக் கருத்துகள் தூபம் போடுவதாகவும் உள்ளது.  சமீப காலமாகச் சீர்குலைவு சக்திகள் அதிகமாக தலை தூக்கி வருகின்றன. அத்தகைய சக்திகளுக்கு வழிகாட்டுவதாக ஆளுநர் அவர்களின் இந்தப் பேச்சு அமைந்திருப்பது வருத்தமளிப்பதாக உள்ளது. எனவே அதனைக் கண்டிக்க வேண்டியதாக உள்ளது.

DMK Treasurer Tr Balu condemns Governor of Tamil Nadu for making anti secular remarks

உறுதிமொழிக்கு எதிரானது

இந்தியாவை வழிநடத்துவது இந்திய அரசியலமைப்புச் சட்டம்தானே தவிர, சனாதன தர்மம் அல்ல என்பதை ஆளுநர் அவர்களுக்கு நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளேன். மனுதர்மத்தின் ஆட்சி நடக்கவில்லை, மக்களாட்சியே நடக்கிறது. சனாதன தர்மம் என்பது சாதிக்கொரு நீதி சொல்வது ஆகும். ஆனால் இப்போது நடப்பது சட்டத்தின் ஆட்சி. சட்டத்தின் முன் அனைவரும் சமமே தவிர, வேறுபாடுகள் இல்லை. மனிதனை நான்கு வர்ணமாகப் பிரித்து, அதில் உயர்வு தாழ்வு கற்பித்து - சலுகையிலும் தண்டனையிலும் கூட சாதி வேற்றுமையை நிலை நிறுத்திய சனாதன காலத்தின் மேல் 'பிரிட்டிஷ் ஆட்சியின் சட்டக் குண்டுகள்' வீசப்பட்டு 200 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதை எல்லாம் மறந்து விட்டு ஆளுநர் ரவி அவர்கள் இன்னும் சனாதனப் பிரமையில் இருக்கிறார். அமெரிக்க வெடிகுண்டுகளைப் பற்றி படித்திருக்கும் அவர், இந்தியாவின் உருவாக்கப்பட்ட சட்டங்களின் வரலாற்றை அறியாமல் இன்னமும் சனாதனம் பற்றிப் பேசிக் கொண்டு இருப்பது அவரது காலாவதியாகிப் போன சிந்தனையையே காட்டுகிறது.  90 விழுக்காடு மக்களுக்கு எதிரானது சனாதனம். சமூகத்தின் சரிபாதியான பெண் இனத்துக்கு எதிரானது சனாதனம். எனவே, அதனை நியாயப்படுத்தி கருத்துகளை உதிர்ப்பது, இந்தியாவின் பெரும்பான்மை மக்களுக்கே எதிரானது ஆகும். சனாதனத்துக்கு ஆதரவாகவும், மதச்சார்பின்மைக்கு எதிராகவும் ஆளுநர் தொடர்ந்து பேசுவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. அரசியலமைப்புச் சட்டமும், உச்சநீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளும் மாநில அரசின் கொள்கை முடிவுகளுக்கு கட்டுப்பட்டவர்களே ஆளுநர்கள் என்றுதான் சொல்கிறது. அத்தகைய எல்லையை மறந்தும், மீறியும் ஆளுநர் தனது கருத்தளிக்கும் உரிமையைப் பயன்படுத்துவது சரியல்ல. மதவாத, சனாதன, வர்ணாசிரம, வன்முறைக் கருத்துகளை ஆளுநர் பதவியில் இருந்து கொண்டு தெரிவிப்பது முறையுமல்ல, சட்டமீறல் ஆகும். அவர் ஏற்றுக் கொண்ட பதவியேற்பு உறுதிமொழிக்கு முற்றிலும் முரணானது ஆகும். எனவே, இப்போது சொல்லிய கருத்தை திரும்பப் பெற்று, இனிச் சொல்லாமல் இருக்கவும் உறுதி எடுக்க மாண்புமிகு ஆளுநரைக் கேட்டுக் கொள்வதாக டி.ஆர்.பாலு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்

ஆளுநரின் பேச்சு தேசத்திற்கு நல்லதல்ல..! ஆர்.எஸ்.எஸின் ப்ராடக்ட் தான் ஆர்.என்.ரவி..! திருமாவளவன் விளாசல்

Follow Us:
Download App:
  • android
  • ios