அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுக கள்ள ஓட்டுகளை நம்பி இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். ஆளுங்கட்சியினர் அதிகாரிகளை மிரட்டி படிவங்களை விநியோகிப்பதாகவும், இது சட்டவிரோதம் என்றும் அவர் கூறியுள்ளார்.

திமுக கள்ள ஓட்டுகளை நம்பியே இருக்கும் கட்சி என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நடைமுறையில், ஆளும் திமுக அரசு சட்ட விதிகளை மீறுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

புதன்கிழமை சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஜெயக்குமார் திமுக மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

திமுக மீது குற்றச்சாட்டு

சட்ட விதிகளின்படி, வாக்காளர்களுக்குரிய படிவங்களை வாக்குச்சாவடி அலுவலர்கள் (BLO-க்கள்) மட்டுமே வழங்கவும், திரும்பப் பெறவும் வேண்டும். ஆனால், பல மாவட்டங்களில் தி.மு.க.-வினர் இந்த நடைமுறையை மீறுவதாக ஜெயக்குமார் குற்றம் சாட்டினார்.

ஆளுங்கட்சியினர் வாக்குச்சாவடி அலுவலர்களை மிரட்டி, அவர்களே வாக்காளர்களிடம் படிவங்களை வழங்குவதாகவும், இது நியாயமற்ற செயல் என்றும் ஜெயக்குமார் கூறினார்.

அரசியல் கட்சியினர் பி.எல்.ஓ.-க்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில் தவறில்லை; ஆனால், அவர்களே படிவங்களைக் கொடுப்பது சட்ட விரோதம். இதுபோன்று நடப்பதால் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை உருவாகும் என்று அவர் எச்சரித்தார்.

கள்ள ஓட்டை நம்பி இருக்கும் கட்சி

"கள்ள ஓட்டை நம்பியே தி.மு.க. இருக்கிறது" என்று அவர் வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார். தேர்தல் அதிகாரிகளை மிரட்டி அவர்களிடமிருந்து படிவங்களை தி.மு.க.-வினர் பறிப்பதாகவும் ஜெயக்குமார் தெரிவித்தார்.

வாக்காளர் பட்டியலில் இருந்து எந்த வகையிலும் வாக்காளர்களை நீக்க அ.தி.மு.க. அனுமதிக்காது என்று ஜெயக்குமார் உறுதி அளித்தார்.

SIR நடைமுறையின் மூலம் சிறுபான்மையின வாக்குகளை நீக்கிவிடுவார்கள் என்று தி.மு.க. வைக்கும் வாதம் அர்த்தமற்றது மற்றும் தவறானது என்றும் அவர் நிராகரித்தார்.

தவெக பொதுக்குழு

கரூர் சம்பவத்துக்குப் பின் முதல் முறையாக நடந்துள்ள தவெக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த ஜெயக்குமார், புதிய கட்சி தொடங்குபவர்கள் தங்கள் கட்சிக்கு தனித்தன்மையை உருவாக்கவே விரும்புவார்கள் என்றார்.

மேலும், "தவெக தலைமையில்தான் கூட்டணி, விஜய்தான் முதல்வர் வேட்பாளர் என்று அவர்கள் பேசியிருக்கலாம். அது அவர்களின் கருத்து. ஆனால், யார் முதலமைச்சர் என மக்கள்தான் தீர்மானிப்பார்கள்.” என்றார்.

“அதிமுக தலைமையில்தான் கூட்டணி; இதுதான் எங்கள் கருத்து,” என்று திட்டவட்டமாகத் தெரிவித்த அவர் கூட்டணி குறித்து இப்போது எதுவும் கருத்து தெரிவிக்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.

“தேர்தலுக்கு இன்னும் 5 அமாவாசைகள் உள்ளன. இதில் 2 அமாவாசைக்கு முன்பு தேர்தல் களம் மாறிவிடும். திமுகவால் அதுவரைதான் ஆட முடியும்.” எனவும் ஜெயக்குமார் கூறினார்.

சீமானுக்கு பதிலடி

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிமுகவை விமர்சிப்பது பற்றி பதில் அளித்த ஜெயக்குமார், “அவர் அதனை நிறுத்திக்கொள்ள வேண்டும். தயவு செய்து எங்களிடம் மோத வேண்டாம். அம்மா மீது பாசம் கொண்டவர்களை வசைபாடினால் நிச்சயமாக வாங்கி கட்டிக்கொள்வீர்கள்.” என்று எச்சரித்தார்.

மேலும், ஐந்தறிவு கொண்ட கடல் ஆமை, காட்டு மரம் ஆகியவற்றுடன் பேசுபவர்களிடம் நாம் பேச முடியுமா? என்று நகைச்சுவையாகக் கேள்வி எழுப்பினார்.