ஆவணத்தில் இருந்த எழுத்துப் பிழை காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான 30 வயது இளைஞர் தற்கொலை செய்துகொண்டார். வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் போது இது சிக்கலை ஏற்படுத்துமோ என்ற அச்சமே தற்கொலைக்குக் காரணம் என குடும்பத்தினர் கூறுகின்றனர்.
மேற்கு வங்கத்தின் ஹவுரா மாவட்டத்தில், தேர்தல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நடைபெற்று வரும் நிலையில், தனது அடையாள ஆவணத்தில் ஏற்பட்ட பிழை காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான 30 வயது இளைஞர் ஒருவர் செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
உலுபெரியா பகுதி, காலிசானியைச் சேர்ந்த ஜாஹிர் மால் என்பவர் இன்று காலை தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
எழுத்துப் பிழையால் மன உளைச்சல்
ஜாஹிர் மாலின் குடும்பத்தினர் அளித்த தகவலின்படி, அவரது அதிகாரப்பூர்வ ஆவணங்களில் ஒன்றில் எழுத்துப் பிழை (Spelling Error) இருந்ததைக் கண்டறிந்த பிறகு அவர் கடும் மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக இந்தப் பிழையைச் சரிசெய்ய உள்ளூர் அரசு அலுவலகங்களுக்குச் சென்று முயற்சி செய்துள்ளார், ஆனால் அவரால் பிழையைச் சரிசெய்ய முடியவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
SIR நடைமுறையின் போது இந்தப் பிழை தனது குடியுரிமை அல்லது வாக்காளர் தகுதியைச் சரிபார்ப்பதில் சிக்கல்களை ஏற்படுத்திவிடுமோ என்று ஜாஹிர் அஞ்சிதாகவும் என்றும் போலீசார் கூறுகின்றனர்.
இந்த அச்சமே அவரது மரணத்திற்கு வழிவகுத்தது என்று குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
திரிணாமுல் காங்கிரஸ் ஆறுதல்
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் (TMC) கட்சியின் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி, அமைச்சர் புலாக் ராயை ஜாஹிர் மாலின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறுமாறு அறிவுறுத்தினார்.
அதன்படி, அமைச்சர் புலாக் ராய் பிற்பகலில் இறந்தவரின் உறவினர்களைச் சந்தித்து அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதாக உறுதியளித்தார்.
அபிஷேக் பானர்ஜி இந்தச் சம்பவம் குறித்துப் பேசுகையில், SIR செயல்பாட்டின் போது வாக்காளர் பட்டியலில் இருந்து தங்கள் பெயர் நீக்கப்பட்டுவிடுமோ என்ற பயத்தில் மேற்கு வங்கத்தில் ஒரு வாரத்திற்குள் ஏழு பேர் மரணமடைந்துள்ளதாகக் குற்றம் சாட்டினார்.
(நீங்கள் மன அழுத்தத்திலோ, நம்பிக்கை இழந்த நிலையிலோ இருந்தால், தயவுசெய்து உதவி நாடுங்கள். ஆவணப் பிழைகள், தனிப்பட்ட சிக்கல்கள், அல்லது வாழ்க்கைப் பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும், பேசுவதற்கும் தீர்வு காண்பதற்கும் வழிகள் உள்ளன. தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறையின் (SNEHA) தற்கொலை தடுப்பு உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்: 044 - 24640050 அல்லது உங்கள் அருகிலுள்ள மனநல ஆலோசனை மையத்தை அணுகலாம்.)
