உத்தரப் பிரதேசத்தில், கணவர் இறந்துவிட்டதாக போலி மரணச் சான்றிதழ் சமர்ப்பித்து, காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து ரூ. 25 லட்சம் பெற்ற தம்பதியை லக்னோ காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விசாரணையில் தம்பதியினர் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
உத்தரப் பிரதேசத்தில் கணவர் இறந்துவிட்டதாகப் போலி மரணச் சான்றிதழ் அளித்து, காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து ரூ. 25 லட்சம் பணத்தைப் பெற்ற ஒரு தம்பதியை லக்னோ காவல்துறையினர் புதன்கிழமை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் ரவி ஷங்கர் மற்றும் அவரது மனைவி கேஷ் குமாரி என்றும் இவர்களிடம் நடந்ததிய விசாரணையில், இருவரும் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் லக்னோ காவல்துறை தெரிவித்துள்ளது.
போலி இறப்புச் சான்றிதழ் மோசடி
லக்னோ காவல்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, புகார்தாரர் சந்தீப் வாட்கர் என்பவர், ரவி ஷங்கர் என்ற காப்பீட்டுதாரருக்கு அவிவா இந்தியா (Aviva India) நிறுவனத்தில் 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ரூ. 25 லட்சத்திற்கான ஆயுள் காப்பீட்டுக் கொள்கை வழங்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் தேதி, ரவி ஷங்கரின் மனைவி கேஷ் குமாரி ஒரு காப்பீட்டுக் கோரிக்கை மனுவைத் தாக்கல் செய்தார். அதில், தனது கணவர் ஏப்ரல் 9 ஆம் தேதி இறந்துவிட்டதாகக் குறிப்பிட்டு, காப்பீட்டுத் தொகையான ரூ. 25 லட்சத்தைக் கோரினார்.
பெண் சமர்ப்பித்த ஆவணங்களின் அடிப்படையில், காப்பீட்டுக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஏப்ரல் 21 ஆம் தேதியே ரவி ஷங்கரின் கணக்கில் பணம் செலுத்தப்பட்டது.
உண்மை அம்பலமானது எப்படி?
இருப்பினும், காப்பீட்டு நிறுவனம் மேற்கொண்ட உள் விசாரணையின்போது, ரவி ஷங்கர் உயிருடன் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, காப்பீட்டு நிறுவனம் சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ரவி ஷங்கரும் கேஷ் குமாரியும் கைதாவதைத் தவிர்ப்பதற்காகத் தொடர்ந்து முயற்சி செய்து வந்துள்ளனர். திங்கட்கிழமை இருவரும் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு, தீவிர விசாரணை மேற்கொண்ட பிறகு அவர்கள் மோசடி செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
