அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ், தனது இந்து மனைவி உஷா வேன்ஸ் ஒருநாள் கிறிஸ்துவ மதத்தைத் தழுவ வேண்டும் என விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். இருப்பினும், அவரது நம்பிக்கையை மதிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ், இந்து மதப் பின்னணியில் வளர்ந்த மனைவி உஷா வேன்ஸ் என்றாவது ஒருநாள் கிறிஸ்துவ மதத்தைத் தழுவ வேண்டும் என்று விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

மிசிசிப்பியில் புதன்கிழமை நடைபெற்ற டர்னிங் பாயின்ட் யு.எஸ்.ஏ. நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசும்போது, அவர் இந்தக் கருத்தைப் வெளிப்படையாகத் தெரிவித்தார்.

மனைவி மதம் மாற வேண்டும்

உஷா வேன்ஸ் எப்போதாவது "கிறிஸ்துவை நாடி வருவாரா" என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த ஜே.டி. வேன்ஸ், "பெரும்பாலான ஞாயிற்றுக்கிழமைகளில், உஷா என்னுடன் தேவாலயத்திற்கு வருவார். நான் தேவாலயத்தில் எதனால் ஈர்க்கப்பட்டேனோ, அதே விஷயத்தால் அவரும் ஒருநாள் ஈர்க்கப்பட வேண்டும் என்று உண்மையிலேயே விரும்புகிறேன். ஏனெனில் நான் கிறிஸ்துவின் நற்செய்தியை நம்புகிறேன். என்றாவது என் மனைவியும் அதைக் கண்டுகொள்வார் என்று நம்புகிறேன்" என்றார்.

எனினும், தனது மனைவியின் இந்து நம்பிக்கை தனக்கு எந்தவிதமான பிரச்சினையையும் ஏற்படுத்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். "அனைவருக்கும் சுயமான விருப்பம் உள்ளது என்று கடவுள் கூறுகிறார். எனவே அவர் மாறாவிட்டாலும் அதில் எனக்கு எந்தப் பிரச்சினையையும் இல்லை. நீங்கள் நேசிக்கும் ஒருவருடன், நண்பர்களுடன், குடும்பத்துடன் இருக்கவேண்டிய புரிதல் இது," என்று வேன்ஸ் கூறினார்.

Scroll to load tweet…

கத்தோலிக்கத்தைத் தழுவிய ஜே.டி.வான்ஸ்

அமெரிக்காவின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஜே.டி. வேன்ஸ், 2019-ஆம் ஆண்டில் கத்தோலிக்க மதத்தைத் தழுவினார். ஆனால், தனது மனைவியை முதன்முதலில் சந்தித்தபோது, தன்னை ஒரு கடவுள் மறுப்பாளராகவே கருதினார். எனினும், வேன்ஸ் தம்பதியரின் குழந்தைகள் கிறிஸ்துவ மத முறைப்படி வளர்க்கப்படுகிறார்கள், ஒரு கிறிஸ்துவப் பள்ளியில்தான் படிக்கிறார்கள்.

மதச்சார்பின்மை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் கூறிய ஜே.டி.வான்ஸ், "கிறிஸ்துவத்தின் மதிப்பீடுகள் இந்த நாட்டிற்கு முக்கியமான அடித்தளம் என்று கருதுகிறேன். இதைச் சொல்வதில் எனக்குத் தயக்கம் இல்லை. இந்த நாட்டின் கிறிஸ்துவ அடித்தளம் ஒரு நல்ல விஷயம் என்று சொல்வதில் நான் நேர்மையாக இருக்கிறேன்" என்றார்.

இந்தியர்களுக்கு எதிரான போக்கு

இதேவேளையில், அமெரிக்காவில் இந்தியர்கள் அதிக அளவில் பெரும் எச்-1பி விசாக்கள் குறித்த விவாதம் அதிகரித்து வரும் சூழ்நிலையில், இந்தியர்களுக்கு எதிரான இனவெறி மற்றும் வெறுப்புப் பேச்சுகளும், இந்தியர்களை நாடு கடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் அதிகரித்து வருகின்றன.

அமெரிக்க காங்கிரஸில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்து மற்றும் தேசிய புலனாய்வுத் துறையின் இயக்குநருமான துளசி கப்பார்ட், தீபாவளி வாழ்த்துக்களை 'எக்ஸ்' சமூக ஊடகத்தில் பதிவிட்ட பிறகு, பல பயனர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். "தீபாவளி கொண்டாடுவது அமெரிக்கப் பண்பாடு அல்ல. இந்தியாவிற்கே செல்லுங்கள்" என்றும் "எங்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள்" என்றும் வெறுப்புக் கருத்துகளைப் பதிவிட்டனர்.

எஃப்.பி.ஐ. (FBI) இயக்குநர் காஷ் பட்டேலும் தனது தீபாவளி பதிவில் இதேபோன்ற எதிர்ப்பை எதிர்கொண்டார். "இயேசுவின் வழியைத் தேடுங்கள். அவர்தான் சத்தியம், அவரே ஒளி" என்று ஒரு பயனர் பதிவிட்டார். மற்றொருவர் “மனந்திரும்பி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு விசுவாசமாக இருங்கள்” என்று இன்னொருவர் கூறினார்.