கலிபோர்னியாவில் தீபாவளிக்கு அரசு விடுமுறை! அமெரிக்க வாழ் இந்தியர்கள் செம குஷி!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், தீபாவளிப் பண்டிகைக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின்படி, பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும், மேலும் அரசு ஊழியர்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு எடுக்கலாம்.

கலிபோர்னியாவில் தீபாவளிக்கு அரசு விடுமுறை
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தீபாவளி திருநாளை, மாநில விடுமுறைப் பட்டியலில் அதிகாரப்பூர்வமாகச் சேர்க்கும் மசோதாவுக்கு (AB 268) கலிபோர்னியா ஆளுநர் கேவின் நியூசம் (Gavin Newsom) இன்று ஒப்புதல் அளித்துள்ளார். கலிபோர்னியாவில் வாழும் இந்துக்கள், ஜைனர்கள், புத்தர்கள் மற்றும் சீக்கியர்கள் தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர். தீபாவளிக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பது அந்த மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதிய சட்டத்தின்படி, 2026 ஆம் ஆண்டு முதல் தீபாவளி அன்று, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தீபாவளிக்கு விடுமுறை விடப்படும்.
அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை
வட அமெரிக்க இந்துக்கள் கூட்டமைப்பின் (CoHNA) தலைமைத் தகவல் தொடர்பு அதிகாரி புஷ்பிதா பிரசாத் இது குறித்துப் பேசுகையில், "கலிபோர்னியாவில் உள்ள இந்து குழந்தைகள் தீபாவளி பண்டிகையின்போது குடும்பத்தினருடன் இருக்கும் பாரம்பரிய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் முடியும்," என்று கூறினார்.
மேலும், மாநில அரசு ஊழியர்கள், தீபாவளி அன்று ஊதியத்துடன் கூடிய விடுப்பு எடுக்க இந்தச் சட்டம் வழிவகை செய்கிறது. எனவே அவர்கள் இந்த விடுமுறை மூலம் பயனைகிறார்கள்.
கலிபோர்னியாவில் இயற்றப்பட்டுள்ள இந்தச் சட்டம் பன்முகத் தன்மையை மதிக்கும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
தீபாவளிக்கு அங்கீகாரம்
"தீபாவளி பண்டிகை ஃபிஜி, கயானா, இந்தியா, மலேசியா, மொரீஷியஸ், மியான்மர், நேபாளம், பாகிஸ்தான், சிங்கப்பூர், இலங்கை, சுரினாம், டிரினிடாட் மற்றும் டொபாகோ உட்பட 13க்கும் மேற்பட்ட நாடுகளில் விடுமுறையாக அங்கீகரிக்கப்பட்ட மிகவும் பிரபலமான இந்துப் பண்டிகைகளில் ஒன்றாகும்" என்று புஷ்பிதா பிரசாத் குறிப்பிட்டார்.
இந்தச் சட்டம் பல அமைப்புகள், சட்டமன்ற உறுப்பினர்களிற் பல ஆண்டு கால முயற்சியின் வெற்றி என்று கூறிய அவர், இந்த மசோதாவைத் தாக்கல் செய்த சட்டமன்ற உறுப்பினர்களான தர்ஷனா படேல் மற்றும் ஆஷ் கல்ரா ஆகியோருக்கும் நன்றி தெரிவித்தார்.