Karur Stampede: கரூரில் 41 பேர் உயிரிழந்த கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவைத் தொடர்ந்து, திமுக அரசின் மீது பாஜக தலைவர் எச்.ராஜா கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
கரூரில் 41 உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. மேலும் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டதையடுத்து, தமிழக அரசு அல்லது உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டிருந்த அனைத்து விசாரணைகளும் நிறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொய் பித்தலாட்டங்களால் கட்டியெழுப்பப்பட்ட திமுக அரசின் குறுத்தெலும்பு நொறுங்குமாறு குட்டு வைக்கவும் உச்சநீதிமன்றம் தவறவில்லை என எச்.ராஜா கூறியுள்ளார். இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 உயிர்கள் பலியான வழக்கை சிபிஐக்கு மாற்றிய மாண்பமை உச்சநீதிமன்றம், பொய் பித்தலாட்டங்களால் கட்டியெழுப்பப்பட்ட திமுக அரசின் குறுத்தெலும்பு நொறுங்குமாறு குட்டு வைக்கவும் தவறவில்லை.
அரசு மருத்துவமனையில் ஒரே இரவில் அத்தனை பேருக்கு பிணக்கூறாய்வு நடத்துவதற்கான வசதிகள் இருந்தனவா? எத்தனை பிணக்கூறாய்வு மேசைகள் இருந்தன? மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் கீழ் வரும் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் எதற்காக விசாரித்தது? SIT-க்கு மாற்றப்பட்ட கரூர் வழக்கை கிரிமினல் ரிட் வழக்காக விசாரித்தது ஏன்? உள்ளிட்ட பல கேள்விகளை ஆளும் அரசை நோக்கி மாண்பமை உச்சநீதிமன்றம் அடுக்கியதிலிருந்தே தெரிகிறது, இந்த வழக்கு எத்தனை அவசரமாக ஜோடிக்கப்பட்டுள்ளது என்பது.
பெரும் மக்கள் திரளும் பிற அரசியல் கூட்டங்களுக்கு குறுகலான சந்துக்களைக் கொடுப்பது, முதல்வரைத் தவிர மற்ற தலைவர்களின் ரோடு ஷோக்களுக்கு அனுமதி மறுப்பது, அரசியல் நிகழ்வுகளுக்கு முறையான பாதுகாப்பு வழங்காமல் ஒரு A1 குற்றவாளியின் இறுதி சடங்கில் ஆயிரக்கணக்கான காவலர்களை குவிப்பது உள்ளிட்ட ஆளும் அரசின் பல அயோக்கியத்தனங்கள் நீதிமன்றங்களின் தயவால் ஒவ்வொன்றாக மக்களிடையே அம்பலப்படத் துவங்கியுள்ளது. சிக்குண்ட அறிவாலய உடன்பிறப்புகள் ஆளுக்கொரு புறம் சிதறி ஓடத் துவங்கியுள்ளனர். இந்த கண்கொள்ளா காட்சியை பார்க்க பார்க்கத் திகட்டவில்லை என தெரிவித்துள்ளார்.
