கரூர் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததற்கு, தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து செந்தில் பாலாஜி பதற்றமடைவது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.

கரூர் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில், தி.மு.க. அரசு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தால் இந்த உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும் என்றும், இந்த உயிரிழப்புகளுக்கு அரசே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

தருமபுரியில் இன்று (வியாழக்கிழமை) நடந்த பரப்புரைக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, கரூர் சம்பவம் குறித்துக் கடுமையான கருத்துகளைத் தெரிவித்தார்.

தமிழ்நாடுக்குத் தலைகுனிவு

தமிழகமே தலைகுனிந்தது அவர் பேசுகையில், “தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் நடிகர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில், உரிய பாதுகாப்பு வசதிகள் அளிக்கப்படாத காரணத்தால் 41 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் காரணமாக இன்று தமிழ்நாடே தலைகுனிந்து நிற்கிறது” என்று வேதனை தெரிவித்தார்.

“அரசு இந்தப் பிரசாரக் கூட்டத்துக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்கியிருந்தால், 41 உயிர்கள் காக்கப்பட்டிருக்கும். எனவே, இந்தக் கோர உயிரிழப்புகளுக்கு ஆளும் தி.மு.க. அரசுதான் முழுப் பொறுப்பேற்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.

செந்தில் பாலாஜிக்கு ஏன் பயம்?

செந்தில் பாலாஜிக்கு கேள்வி தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, இந்தச் சம்பவம் தொடர்பாக தி.மு.க.வின் முக்கியப் பிரமுகரான செந்தில் பாலாஜி பதற்றத்துடன் காணப்படுவதாகக் குற்றம் சாட்டினார்.

“மடியில் கனம் இல்லை என்றால், வழியில் ஏன் பயம் இருக்க வேண்டும்? மடியில் கனம் இல்லை, வழியில் பயம் இல்லை என்றுதானே இருக்க வேண்டும். ஆனால், கரூர் விவகாரம் தொடர்பாக செந்தில் பாலாஜி ஏன் இவ்வளவு பதறுகிறார்? அவர் முகத்தில் பயம் தெளிவாகத் தெரிகிறது. தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படாததே காரணம் என்பதை அவர் மறைக்கப் பார்க்கிறார்” என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.