தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட தீபாவளி போனஸ், நடப்பு மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்டதைக் கண்டித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டிடிவி பிடித்தம் செய்த தொகையை உடனடியாக விடுக்க வேண்டும்.

தூத்துக்குடி மாநகராட்சியில் அவர் லேண்ட் என்ற தனியார் நிறுவனத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் சுமார் 700க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை வாகன ஓட்டுநர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவித்த தூய்மை பணியாளர்களுக்கு 526 தூய்மை வாகன ஓட்டுனர்களுக்கு 633 வழங்க வேண்டும் என்ற ஊதியத்தை இதுவரை முறையாக வழங்காமல் இழுத்தடித்து வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவ்வப்போது ஊதிய உயர்வை கோரிக்கையை வலியுறுத்தி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தூய்மை வாகன ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் ஆக தூய்மை பணியாளர் போராட்டத்திற்கு பின்பு ரூபாய் போனசாக 3000 மற்றும் 2000 முன்பணம் சேர்த்து 5000 ரூபாய் வழங்கப்பட்டது. இதை மாதம் தோறும் 500 பிடிக்கப்படும் என்று வழங்கப்பட்ட நிலையில் இந்த மாதம் வழங்கப்பட்ட ஊதியத்தில் சுமார் 2500 ரூபாய் அவர் லேண்ட் எனும் நிறுவனம் பிடித்தம் செய்து ஊதியம் வழங்கி உள்ளது. இதைத் தொடர்ந்து தொழிற்சங்க நிர்வாகிகள் அவர் லேண்ட் நிறுவனத்தை அணுகி கேட்டபோது மாநகராட்சி சார்பில் தங்கள் நிறுவனம் மீது அபராதம் வசூலித்து விதிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக அந்த பணத்தை வசூல் செய்வதற்காக தொழிலாளிகளின் பணத்தை பிடித்தம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தூய்மை பணியாளர் சங்கத்தினர் மாநகராட்சி ஆணையர் மற்றும் மாநகராட்சி மேயர் ஆகியோரிடம் தொடர்பு கொண்டு தூய்மை பணியாளர்கள் ஊதியம் பிடித்தம் செய்வதை நிறுத்தி உடனடியாக பிடித்தம் செய்யப்பட்ட ஊதியத்தை திருப்பி வழங்க நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால் மாநகராட்சி நிர்வாகம் இதற்கு இந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை வாகன ஓட்டுனர்கள் இன்று பணிக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளதுடன் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் மக்களின் சுகாதாரத்தைப் பேணிக்காக்கும் பணியிலும் அயராது பாடுபட்டுவரும் தூய்மைப் பணியாளர்களிடம் பிடித்தம் செய்த தொகையை உடனடியாக விடுக்க வேண்டும் என டிடிவி.தினகரன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். அதில் தீபாவளி பண்டிகைக்கு வழங்கிய போனஸ் தொகையை நடப்பு மாத ஊதியத்தில் பிடித்தம் செய்துவிட்டதாகக் கூறி தூத்துக்குடி மாநகராட்சியைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் வேலைநிறுத்தம் அறிவித்து போராட்டம் நடத்தி வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

தூய்மைப் பணிகளைத் தனியார் மயமாக்க எதிர்ப்பு, ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தின் தூய்மைப் பணியாளர்கள் போராடி வரும் நிலையில், தீபாவளி போனஸாக வழங்கப்பட்ட தொகையை ஊதியத்தில் பிடித்தம் செய்திருப்பது மனிதாபிமானமற்ற செயலாகும்.

சென்னை மாநகராட்சி தொடங்கி, கோவை, திருப்பூர், மதுரை, தூத்துக்குடி என பல்வேறு பகுதிகளில் தங்களின் வாழ்வாதாரத்திற்காகப் போராடிக் கொண்டிருக்கும் தூய்மைப் பணியாளர்களை அடக்கி ஒடுக்குவதும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதும் தொடர்கதையாகி வருவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

எனவே, கோவிட் பெருந்தொற்று காலம் தொடங்கி மழை, வெள்ளம், புயல் என அத்துனை இயற்கை பேரிடர்களையும் எதிர்கொண்டு நகரத்தைத் தூய்மையாக வைத்திருக்கவும், மக்களின் சுகாதாரத்தைப் பேணிக்காக்கும் பணியிலும் அயராது பாடுபட்டுவரும் தூய்மைப் பணியாளர்களிடம் பிடித்தம் செய்த தொகையை உடனடியாக விடுவிப்பதோடு, அவர்களின் நீண்டகால கோரிக்கையான பணிநிரந்தர கோரிக்கையை நிறைவேற்றித் தந்திட வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.