பொதுமக்களுக்கு குட்நியூஸ்! எதிர்பாராத அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை!
நாகூர் தர்காவின் 468-ம் ஆண்டு கந்தூரி விழா நவம்பர் 21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்து நாகூருக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகூர் ஆண்டவர் என போற்றப்படும் செய்யது சாகுல் ஹமீது பாதுஷாவின் நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் கந்தூரி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு புகழ் பெற்ற நாகூர் தர்காவின் 468-ம் ஆண்டு கந்தூரிவிழா நவம்பர் 21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தாபூத் எனும் சந்தனக்கூடு ஊர்வலம் நவம்பர் 30ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் நாகூர் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் நிர்வாக இயக்குநர் க.தசரதன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: நாகப்பட்டினம் மாவட்டம் புகழ்பெற்ற நாகூர் தர்கா கந்தூரி விழா நவம்பர் 21ம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 30.11.2025 அன்று சந்தனகூடு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து நாகூர் கந்தூரி திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் வருகைதர உள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் தஆணைக்கிணங்கவும், போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்களின் வழிக்காட்டுதலின்படியும் நாகூர் கந்தூரி திருவிழாவினை முன்னிட்டு நவம்பர் 21ம் முதல் டிசம்பர் 01 வரை சென்னை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை, மதுரை, சிதம்பரம், இராமநாதபுரம், தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய ஊர்களிலிருந்தும், நாகப்பட்டினம் - நாகூர் மற்றும் காரைக்கால் - நாகூர் வழித்தடத்திலும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
மேலும், தினசரி இயக்கப்பட்டு வரும் 127 பேருந்துகள் வாயிலாக 335 நடைகளுடன் 21.11.2025 முதல் 01.12.2025 வரை கூடுதலாக 100 சிறப்பு பேருந்துகள் இயக்கிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பேருந்து இயக்கத்தினை ஒருங்கிணைக்க நாகூர் மற்றும் நாகப்பட்டினம் பேருந்து நிலையங்களில் விசாரணை மையங்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பொதுமக்கள் இச்சிறப்பு பேருந்து சேவையை பயன்படுத்தி கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.