கஞ்சா விற்பனை செய்தால், இனி குண்டர் சட்டம் தான்.. அதிரடி ஆக்சனில் இறங்கிய காவல்துறை !!
கோவையில் அதிக அளவு கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோவை மாவட்டம், மொத்தமாக பிடிபட்ட 50 கிலோ கஞ்சா பொட்டலங்களை சூலூர் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ‘கடந்த ஒரு மாதத்தில் கோவை மாவட்டத்தில் மட்டும், 130 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 225 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும், கஞ்சா வழக்குகளில் 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் கூறினார். கஞ்சா எங்கிருந்து வருகிறது, யார் சப்ளை செய்கிறார்கள் என்பதை கண்டறிய தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த ஒரு மாதத்தில் 3 டன் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். செயின் பறிப்பு மற்றும் இருசக்கர வாகனத் திருட்டுகளை தடுக்க ஒவ்வொரு உட்கோட்டங்களிலும் டிஎஸ்பி தலைமையில் தனிப்படை செயல்பட்டு வருகிறது என்ற அவர், அதிக அளவில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கருமத்தம்பட்டி உட்கோட்டத்தில் அதிக அளவு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நால்வர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது.
ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் மாணவர்களை நல்வழிப்படுத்த ஒவ்வொரு காவல் நிலையத்திலும் லேப்டாப் மற்றும் இருசக்கர வாகன வசதிகளுடன் பெண்கள் உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என தெரிவிதத மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், இந்த மையத்தின் பெண் காவலர்கள் பள்ளிகளை தொடர்பு கொண்டு மாணவர்களுக்கு சரியான வழியில் செல்ல அறிவுரை வழங்கி வருகின்றனர் என்றும், தவறான வழியில் செல்லும் மாணவர்களை குற்றவாளிகளாக பார்க்கக்கூடாது என்றும் அவர்களை நல்வழிப் படுத்தும் பணியில் காவல்துறையினர் தொடர்ந்து ஈடுபடுவார்கள் என்றும் தெரிவித்தார்.