தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்பு விநாயகர் வாழ்த்து பாடல் - சர்ச்சையில் சிக்கிய வானதி சீனிவாசன் !!
கோவை நீலம்பூர் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் ‘தேசிய கயிறு வாரிய மாநாடு’ நேற்று நடைபெற்றது.75 வது சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட இந்நிகழ்வில் மத்திய சிறு, குறு தொழில் துறை அமைச்சர் நாராயண் ரானே சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை இணை அமைச்சர் பிரதாப் சிங் வர்மா, தமிழக சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன், மத்திய கயிறு வாரியத்தலைவர் குப்புராமு, கயிறு வாரியத்துறை அதிகாரிகள், பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தென்னை நார் சார்ந்த தொழில் முனைவோர் ஏராளமானோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
இம்மாநாட்டில் சிறப்பாக செயல்பட்ட தென்னை நார் மற்றும் கயிறு தொழிற்சாலைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. ஏற்றுமதி, உள்நாட்டு விற்பனை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, தொழில் முனைவோர், சிறப்பாக செயல்படும் கூட்டுறவு மற்றும் தொகுப்புகள் ஆகிய அடிப்படையில் விருதுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக தென்னை நார் சார்ந்து தயாரிக்கப்பட்ட புதிய பொருட்கள் மற்றும் தென்னை நார் தொழில் வளர்ச்சிக்கான புத்தகங்களை மத்திய அமைச்சர் வெளியிட்டார்.
இம்மாநாட்டில் சிறப்புரையாற்றிய மத்திய சிறு, குறு தொழில் துறை அமைச்சர் நாராயண் ரானே, 'மத்திய அரசு தென்னை நார் தொழில்துறையினர் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து நன்கு அறிந்துள்ளது. எனவே மத்திய அரசு சார்பில் ரூ. 19. 26 கோடி மதிப்பீட்டில் புதியதாக 481 தென்னை நார் ஆலைகள் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது தேசத்தின் மேற்குப் பகுதிகளிலும், கோவா, குஜராத் போன்ற பல்வேறு பகுதிகளிலும் இத்தொழிலை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக இந்திய தென்னை நார் வர்த்தகத்தை ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு அடுத்த 5 ஆண்டுகளில் உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்று மத்திய அமைச்சர் நாராயண் ரானே தெரிவித்தார். வழக்கமாக நிகழ்ச்சிக்கு முன்னர் பாடப்படும் தமிழ் தாய் வாழ்த்து பாடப்படாமல் விநாயகர் வாழ்த்து பாடல் பாடப்பட்டது. பின்னர்தான் தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது.
தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக சர்ச்சை எழுந்தப்போது, தமிழ்த்தாய் வாழ்த்து படலை இசைப்பதற்கு பதிலாக பாட வேண்டும் என்றும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்படும்போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. இந்நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முன்பாக விநாயகர் வாழ்த்து பாடல் பாடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.