சென்னை அண்ணாநகரில் ₹23 கோடி மதிப்புள்ள வைரக்கல் கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டு வைரக்கல் மீட்கப்பட்ட நிலையில், வியாபாரி அளித்த புகாரின்படி, மீட்கப்பட்டது போலி வைரம் எனத் தெரியவந்துள்ளது.
சென்னை அண்ணாநகர் 17-வது தெருவைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி சந்திரசேகர் (வயது 70) வைத்திருந்த பழமையான வைரக்கல் ஒன்றை 23 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சந்திரசேகர் தனது வைரக்கல்லை விற்பனை செய்வதற்காக வடபழனியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் 4 ஏஜெண்டுகளுடன் விலை பேசி வந்தார். அப்போது, வைரக்கல்லை வாங்குவது போல் வந்த அந்த 4 ஏஜெண்டுகளும் திடீரென கொள்ளையர்களாக மாறினர். அவர்கள் சந்திரசேகரை ஓட்டல் அறையில் கட்டிப்போட்டுவிட்டு வைரக்கல்லை கொள்ளையடித்துச் சென்றனர்.
இதுகுறித்து சந்திரசேகர் அளித்த புகாரின் பேரில் வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொள்ளையர்களை தீவிரமாக தேடிய போலீசார், அருண் பாண்டியராஜன், ஜான் லாயிட், விஜய், ரத்தீஷ் ஆகிய 4 பேரையும் தூத்துக்குடியில் வைத்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து வைரக்கல்லும் மீட்கப்பட்டது. கைது செய்யப்பட்ட 4 பேரும் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் தற்போது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. வைர வியாபாரி சந்திரசேகர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் ஒரு பரபரப்பு புகார் மனுவை அளித்துள்ளார். அந்த மனுவில், கொள்ளையர்களிடமிருந்து போலீசார் மீட்டுக் கொண்டு வந்த வைரக்கல் உண்மையான வைரம் இல்லை என்றும், அது ஒரு போலியான கல் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுகுறித்து வடபழனி போலீசாரிடம் கேட்டபோது அவர்கள் தன்னை மிரட்டுவதாகவும், உண்மையான வைரக்கல்லை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தனது புகாரில் சந்திரசேகர் குறிப்பிட்டுள்ளார். இந்த புகார் மனுவை பெற்ற கமிஷனர் அலுவலக அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.
வைரக்கல்லை மீட்ட வடபழனி போலீசார் கூறுகையில், கொள்ளையர்களிடமிருந்து மீட்கப்பட்ட வைரக்கல்லை நீதிமன்றத்தில் ஒப்படைத்துவிட்டோம் என்றும், சந்திரசேகர் கொடுத்துள்ள புகாரில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்தனர். சந்திரசேகர் எழுப்பியுள்ள இந்த புகார் சென்னை போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்திரசேகருக்கு இந்த வைரக்கல்லை கொடுத்தது மதுரையைச் சேர்ந்த அவரது நண்பர் ஆவார். அவரிடமும் இதுகுறித்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்த சம்பவம் 23 கோடி ரூபாய் மோசடி முயற்சியாக இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
