மின் தடை காரணமாக நீட் தேர்வை முழுமையாக எழுத முடியவில்லை என 13 மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இதையடுத்து
நீட் தேர்வு
கடந்த மே 4ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை இளநிலை நீட் தேர்வு நடைபெற்றது. அப்போது ஆவடியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி மையத்தில் 464 மாணவர்களுக்கு தேர்வு எழுதினர். பிற்பகல் 2 மணிக்கு தேர்வு தொடங்கிய நிலையில் 2.45 மணிக்கு துவங்கிய கனமழை காரணமாக 3 மணியில் இருந்து 4.15 மணி வரை மின் தடை ஏற்பட்டதால் தேர்வை முழுமையாக எழுத முடியவில்லை. இந்நிலையில் மறு தேர்வு நடத்த உத்தரவிடக் கோரி திருவள்ளுரை சேர்ந்த சாய் பிரியா, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஹரிஹரன், ராணிப்பேட்டையைச் சேர்ந்த அக்ஷயா உள்ளிட்ட 13 மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு
அதில், மின் தடை காரணமாக குறைவான வெளிச்சத்தில் தேர்வு எழுதியதாகவும், தேர்வு மையத்திற்குள் மழைநீர் புகுந்ததால், மாற்று இடத்தில் இருந்து தேர்வு எழுத அறிவுறுத்தப்பட்டதால் சிரமத்துக்கு உள்ளானதாகவும் கூறியுள்ளனர். கவன சிதறல்கள் காரணமாக திறமையாக தேர்வு எழுத முடியாத நிலையில், கூடுதல் நேரமும் ஒதுக்கப்படவில்லை. முழுமையாக தேர்வு எழுத முடியாததால், தேசிய தேர்வு முகமைக்கு புகார் அளித்தும் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மனுவில் தெரிவித்திருந்தனர்.
நீட் தேர்வு முடிவுகள் வெளியிட தடை
இந்த மனு, நீதிபதி லட்சுமி நாராயணன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் வழக்கறிஞர் ஏ.ஆர்.எல் சுந்தரேசன் ஆஜராகி மின்தடை ஏற்பட்டதா என்பது குறித்தும் அவ்வாறு மின்தடை ஏற்பட்டிருந்தால் மாணவர்களின் கோரிக்கையை பரிசீலிப்பது குறித்தும் பதிலளிக்க அவகாசம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த கோரிக்கையை ஏற்று மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி அதுவரை நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்து விசாரணையை ஜூன் 2ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
