இளைஞரணி நிர்வாகிகள் நியமனம்: உதயநிதிக்கு எதிராக சீறிய திமுக எம்.பி.,!
திமுக இளைஞரணி நிர்வாகிகள் நியமனத்தில் அக்கட்சியின் தர்மபுரி எம்.பி., தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்

திமுகவில் உள்ள பல்வேறு அணிகளில் மிகவும் முக்கியமானது இளைஞரணி. அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் தன் வசம் பல ஆண்டுகளாக வைத்திருந்த பொறுப்பு அது. தற்போது அந்த பொறுப்பு அவரது மகனும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வசம் உள்ளது. இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் 4 ஆண்டுகளை நிறைவு செய்து 5ஆவது ஆண்டி அடியெடுத்து வைத்துள்ளார்.
இதையொட்டி, புதிய இளைஞரணி நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டு அவர்களை உதயநிதி ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார். திமுக இளைஞரணியின் மாவட்ட-மாநகர அமைப்பாளர்/துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கான புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திமுக இளைஞரணி நிர்வாகிகள் நியமனத்தில் அக்கட்சியின் தர்மபுரி எம்.பி., செந்தில்குமார் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இளைஞர் அணி பொறுத்தவரை நியமனத்தில் சரியான முடிவுகள் எடுக்கப்படும் என உறுதியாக நம்புபவன். தர்மபுரி மாவட்ட அறிவிக்கப்பட்ட இரு அமைப்பாளர்களை விட தகுதி வாய்ந்த நபர்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது. இது போல் நடந்துவிடக் கூடாது என பல கடிதங்கள் அளித்தும் பயனில்லை.” என பதிவிட்டுள்ளார்.
இதற்கு முன்னரும் கூட பல்வேறு சமயங்களில் தர்மபுரி எம்.பி., செந்தில்குமார் தலைமைக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டுள்ளார். கட்சியிலும், ஆட்சியிலும் உதயநிதி ஸ்டாலினின் ஆதிக்கம் அதிகளவில் உள்ளதாக கூறப்படும் நிலையில், செந்தில்குமார் எம்.பி., இதுபோன்ற கருத்தை பதிவிட்டுள்ளார். 2024 மக்களவை தேர்தல் எதிர்வரவுள்ள நிலையில், பலரும் தங்களுக்கான சீட்டுகளுக்கு காய்களை நகர்த்தி வரும் நிலையில், கட்சித் தலைமை மீது அக்கட்சியின் சிட்டிங் எம்.பி., ஒருவர் அதிருப்தி தெரிவித்துள்ளது கவனம் ஈர்த்துள்ளது.
முன்னதாக, இளைனஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டதில் இருந்தே இளைஞரணியின் பணிகள் வேகமெடுத்துள்ளன. கிளைக் கழக அளவிலும், வட்ட/வார்டு அளவிலும் இளைஞர் அணி அமைப்புகள் உருவாக்கப்பட்டன. தொகுதி தோறும் ‘திராவிட மாடல்’ பயிற்சிப் பாசறைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இல்லம்தோறும் சென்று இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொன்முடியின் அமைச்சர் பதவி தப்புமா? இன்று வெளியாகிறது தீர்ப்பு! உச்சக்கட்ட பதற்றம்!
அந்த வகையில், பொதுக்குழுவில் அனைத்து அணிகளும் சிறப்பாகச் செயலாற்றிட வேண்டும் எனவும், அணிகளுக்கான புதிய நிர்வாகிகளை நியமிக்கும் பணிகளை உடனடியாக மேற்கொள்ளும்படியும் திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார். அதன்படி, இளைஞர் அணிக்கான மாவட்ட-மாநகர-மாநில நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்றது. புதிய நிர்வாகிகள் தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டது. 72 கழக மாவட்டங்களிலிருந்தும் 4,158 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
தொடர்ந்து, இளைஞர் அணியில் உள்ள 9 மண்டலங்கள் வாரியாக நேர்காணலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு பல்வேறு மாவட்டங்களில் நேர்காணல்கள் நடத்தப்பட்டன. இறுதியாக, விண்ணப்பித்த 4,158 நபர்களிலிருந்து 609 பேர் தேர்வு செய்யப்பட்டு, இளைஞர் அணியின் பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.