திருப்பூர் எம்.ஜி.ஆர் நகரில் அடுத்தடுத்து நான்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்துச் சிதறியதில் 42 தகரக் கொட்டகை வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. நல்ல வேளையாக, விபத்து நிகழ்ந்தபோது வீடுகளில் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் கல்லூரி சாலை, எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் அடுத்தடுத்து நான்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்துச் சிதறிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 42 தகரக் கொட்டகை வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.

சாயாதேவி என்பவருக்குச் சொந்தமான இடத்தில் அமைந்திருந்த தகரக் கொட்டகைகளில் வட மாநிலத் தொழிலாளர்களும், தமிழகத்தின் பிற மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும் வசித்து வந்தனர். இன்று (புதன்கிழமை) காலை, அப்பகுதியில் உள்ள நான்கு சிலிண்டர்கள் அடுத்தடுத்து பயங்கர சத்தத்துடன் வெடித்தன.

வேகமாகப் பரவிய தீ:

இந்தச் சம்பவத்தைக் கண்ட அப்பகுதித் தொழிலாளர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். சிலிண்டர் வெடித்த வேகத்தில் ஏற்பட்ட தீ, சுற்றுவட்டாரத்தில் இருந்த 42 வீடுகளுக்கும் மளமளவெனப் பரவி, அவற்றை முற்றிலுமாகத் தரைமட்டமாக்கியது. கொட்டகைகளில் இருந்த அனைத்துப் பொருட்களும் தீப்பிடித்து எரிந்து நாசமாகின.

விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், திருப்பூர் தீயணைப்புத் துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பல மணி நேரம் போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

42 வீடுகளும் தீயில் நாசம்:

நல்ல வேளையாக, இந்த விபத்து நிகழ்ந்த சமயத்தில் கொட்டகைகளில் தொழிலாளர்கள் யாரும் இல்லாததால், பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும், 42 வீடுகளும் முற்றிலும் எரிந்து நாசமானதால், தொழிலாளர்கள் தங்களின் உடைமைகளையும், வசிப்பிடங்களையும் இழந்து தவித்து வருகின்றனர்.

திருப்பூரில் சிலிண்டர்கள் வெடித்துப் பல கொட்டகைகள் சேதமடைந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.