நாகப்பட்டினம் மாவட்டம் திருப்புகலூரில் அமைந்துள்ள கருந்தாழ்குழலி அம்பாள், அக்னீஸ்வர ஸ்வாமி திருக்கோவில் குடமுழுக்கு பெருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. 

குடமுழுக்கு பெருவிழா

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகலை அடுத்த திருப்புகலூரில் அமைந்துள்ள வேளாக்குறிச்சி ஆதீனம் அருளாட்சிக்குட்பட்ட கருந்தாழ்குழலி அம்பாள், அக்னீஸ்வர ஸ்வாமி திருக்கோவில் குடமுழுக்கு பெருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. குடமுழுக்கு பெருவிழாவை முன்னிட்டு கடந்த 28ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் எட்டு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தன.

அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

எட்டாம் கால யாகசாலை பூஜைகள் முடிவுற்றதை தொடர்ந்து இன்று கடம் புறப்பாடு நடைபெற்றது. இதில் சிவாச்சாரியார்கள் புனித நீர் கடங்களை கோவிலை சுற்றி கோபுரத்திற்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர். அதனைத் தொடர்ந்து திமுக அரசு பொறுப்பேற்று 3000வது கும்பாபிஷேக விழாவை தமிழக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். ராஜகோபுரம் உள்ளிட்ட மூலஸ்தானத்திற்கு சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க, பன்னிரு திருமறைகள் தமிழில் வேத மந்திரங்கள் ஓத புனித நீர் ஊற்றி கும்பாபிஷேக விழாவை வெகு விமர்சையாக நடத்தினர்.

பக்தர்கள் மேல் ட்ரோன் மூலம் புனித நீர்

பின்னர் பக்தர்கள் மேல் ட்ரோன் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது. தமிழக அரசு பொறுப்பேற்றது முதல் திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோவில் 3000வது குடமுழுக்கு பெருவிழா என்பதால், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் மற்றும் தஞ்சை திருவாரூர் நாகை மயிலாடுதுறை காரைக்காலை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தமிழக அரசு பொறுப்பேற்றது முதல் எங்கு பார்த்தாலும் திருக்கோவில்களின் மணி ஓசைகளும், தீப ஒளியும் ஆராதனை முழக்கங்கள் கேட்பதாக பெருமிதம் தெரிவித்த இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, நாகை மண்ணில் தொன்மை வாய்ந்த கோவிலுக்கு இந்து சமய அறநிலைத்துறை சார்பில் 3000வது குடமுழுக்கு பெருவிழாவை கோலாகலமாக கொண்டாடியது மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளதாக கூறினார்.

3500 திருக்கோவில்களின் கும்பாபிஷேகம் நடைபெறும்

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு கூறுகையில்: இந்த ஆண்டு இறுதிக்குள் 3500 திருக்கோவில்களின் கும்பாபிஷேகம் நடைபெறும் என்றும் திமுக அரசு ஆன்மீகத்திற்கு எதிரானது என்பவர்களின் விமர்சனங்கள் இன்று அடித்து நொறுக்கப்பட்டுள்ளது என்று கூறினார். மேலும், திமுகவை விமர்சனம் செய்யும் பாஜக மற்றும் வலதுசாரி அமைப்பினருக்கு திமுக அரசால் வெற்றிகரமாக நடைபெற்றுவரும் குடமுழுக்கு விழாக்கள் மட்டுமே பதிலாக சொல்கிறேன் என்று கூறினார்.