விஜய் கரூரில் நடத்திய கூட்டத்தில் ஏற்பட்ட தாமதத்தால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர், உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Stampede at Vijay Karur rally : தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன்று நாமக்கல் மற்றும் கரூரில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார். இந்த நிலையில் மதியம் 12 மணிக்கு கரூர் வர வேண்டிய விஜய் இரவு 7.30 மணிக்கு தான் கரூர் பகுதிக்கு வந்தடைந்தார். இதன் காரணமாக கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்ட நிலையில், பெண்கள், குழந்தைகள் மயக்கமடைந்துள்ளனர். இவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் தான் 30க்கும் மேற்பட்டவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சி அடையசெய்துள்ளது.

விஜய் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பு

இது தொடர்பாக சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் தோழர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள பதிவில், இன்று கரூரில் த.வெ.க தலைவர் விஜய் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நெரிசலில் சிக்கி இதுவரை 40 பேர் உயிரிழப்பு என்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. இதில் ஏராளமானோர் குழந்தைகள் என்பது மிகப்பெரிய சோகம்.

உயர்நீதிமன்றம் விசாரிக்கனும்

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். எந்தவொரு பிரச்சாரக் கூட்டத்திலும் இவ்வளவு உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது. "எந்த கட்டுப்பாடுகளுக்கும் எங்களை உட்படுத்திக் கொள்ள மாட்டோம்" என்ற ரசிகர்களின் செயல்பாடுகளே இதற்கு முக்கிய காரணமாகும். பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.