திட்டக்குடியில் 2014ல் பள்ளி மாணவிகள் கடத்தப்பட்டு விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த 3 பேருக்கு கடலூர் போக்சோ நீதிமன்றம் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. மேலும் சதீஷ்குமார், தமிழரசி, கபிலன் ஆகியோருக்கு சிறை தண்டனை.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் கடந்த 2014ம் ஆண்டு 7ம் வகுப்பு படித்த 13 வயது மாணவியும் 8ம் வகுப்பு படித்த 14 வயது மாணவியும் கடத்தப்பட்டு விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக 19 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதில் அரியலூர் மாவட்டம் இடையாக்குறிச்சியை சேர்ந்த சதீஷ்குமார்(40), அவரது மனைவி தமிழரசி(40) ஆகியோர் தலைமறைவானார்கள். இந்த வழக்கு பின்னர் சிபிசிஐடி வசம் சென்றது. கடந்த 2019ம் ஆண்டு 16 பேருக்கு கடலூர் போக்சோ நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கில் இருந்து ஒருவர் மட்டும் விடுவிக்கப்பட்டார்.
இதனிடையே தலைமறைவாக இருந்த சதீஷ்குமார் (40), அவரது மனைவி தமிழரசி (40) ஆகியோரை கடந்த சில மாதங்களுக்கு முன் சிபிசிஐடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தஞ்சாவூர் ஜெபமாலைபுரம் கபிலன் (35) என்பவரையும் கைது செய்தனர். இவர்கள் மீதான வழக்கு கடலூர் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கு விசாரணை நிறைவு பெற்ற நிலையில், நீதிபதி பரபரப்பு தீர்ப்பு வழங்கினார். அதில், சதீஷ்குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ.45 ஆயிரம் அபராதம், தமிழரசிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ.15 ஆயிரம் அபராதம், கபிலனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்தார். இதையடுத்து 3 பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


