ஊழல் திமுக அரசால் நலிவடையும் தென்னை நார் தொழில்: அண்ணாமலை கவலை

ஊழல் திமுக அரசினால் தமிழ்நாட்டில் தென்னை நார் தொழிலை நசுக்கப்பட்டு வருவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிக்கை விட்டிருக்கிறார்.

Corrupted DMK govt crushing coir industry: Annamalai sgb

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (சனிக்கிழமை) அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ஊழல் திமுக அரசினால் தமிழ்நாட்டில் தென்னை நார் தொழிலை நசுக்கப்பட்டு வருவதாகச் சொல்கிறார். ஆளும் திமுக அரசு குறித்த பல்வேறு விமர்சனங்களையும் முன்வைத்துள்ளார்.

'தென்னை நார் தொழிலை நசுக்கும் ஊழல் திமுக' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளாதாவது:

கச்சத்தீவை தாரை வார்த்து விட்டு, இன்று கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று போலி போராட்டம் நடத்துவது, காவிரி நீர் உரிமையை விட்டுக் கொடுத்து, அதனை பூதாகாரமான பிரச்சினை ஆக்கக் காரணமாக இருந்து, பின்னர் காவிரி பிரச்சினைக்குப் போராடுவது போல் வேஷமிட்டது, நீட் தேர்வு மசோதாவைக் கொண்டு வந்து விட்டு, இப்போது அதற்கு எதிராகப் போராடுவது, ஆளுங்கட்சியாக இருக்கும்போது டெல்டா பகுதிகளில் மீத்தேன் எடுக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டு விட்டு, பின்னர் எதிர்க்கட்சியாக இருக்கும்போது அதற்கு எதிராகப் போராடியது என ஒவ்வொன்றையும் தாரை வார்த்துவிட்டு, பின்னர் அதற்காகப் போராடுவது போல் கபட நாடகம் ஆடி, மத்திய அரசைக் குற்றம் சொல்லும் திமுக, தற்போது தென்னை நார் தொழிலை ஆரஞ்சு வகை பிரிவில் மாற்ற அரசு உத்தரவு பிறப்பித்து விட்டு, அதனை மறைக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைப்பது போல் நடித்திருக்கிறது.

மத்திய அரசின் சிறு,குறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்துறை அமைச்சகத்தின் கீழ், தென்னை நார் தொழிலை மேம்படுத்த, தேசிய கயிறு வாரியம் இயங்கி வருகின்றது. இதன் மூலம் 74500 கோடி வரை அன்னிய செலாவணியும், உள்நாட்டு உற்பத்தி மற்றும் சந்தை மூலம் வருவாய் வாய்ப்பையும் உருவாக்குகிறது. தமிழகத்தில் சுமார் 8000 மேற்பட்ட தென்னைநார் தொழிற்சாலைகள் உள்ளன.

122 வருடத்தில் இல்லாத வெப்பம்! இந்தியாவை வாட்டி வதைத்த மிக வறண்ட ஆகஸ்ட் மாதம்!

Corrupted DMK govt crushing coir industry: Annamalai sgb

மத்திய அரசின் மாசுக் கட்டுபாட்டு வாரியம், பல்வேறு தொழில்துறை நிறுவனங்களை வெள்ளை, சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என வகைபடுத்தி வைத்திருக்கின்றது. 2016 ஆம் ஆண்டு, தென்னை நார் சார்ந்த தொழிலானது "வெள்ளை" பிரிவில் (White Category) மத்திய அரசின் சுற்றுச் சூழல் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சான்று அளிக்கப்பட்டு இயங்கி வந்தது.

இந்த நிலையில், தென்னை நார் தொழிலை, ஆரஞ்சு வகை பிரிவுக்கு தமிழக அரசு மாற்றவிருப்பதாக அறிந்த தேசிய கயிறு வாரியம், கடந்த 10/11/2021 அன்று, தென்னை நார் சம்பந்தப்பட்ட தொழில்களின் மாசு கட்டுப்பாட்டு வாரிய வகைப்படுத்தலை, மறு ஆய்வு செய்வதற்காக, ஐஐடி போன்ற நிறுவனங்களுடன் இணைந்து, கூட்டு அறிவியல் ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் என்று, மின்னஞ்சல் மூலம் தமிழக அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்குக் கோரிக்கை வைத்தது

ஆனால் அக்கோரிக்கையை நிராகரித்த தமிழக அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், அன்று மாலை 5:30 மணி அளவில், தென்னை நார் தொழிலை, ஆரஞ்சு வகை (Orange Category) என அரசு ஆணை (எண் T2/TNPCB/F.13367 2021) பிறப்பித்து, தென்னை நார் சம்பந்தப்பட்ட தொழிலை வெள்ளை வகை பிரிவிலிருந்து ஆரஞ்சு வகை பிரிவிற்கு மாற்றி உத்தரவிட்டது.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் 10/11/2021 அன்று தென்னை நார் தொழிலை ஆரஞ்சு வரை பிரிவிற்கு மாற்றிப் பிறப்பித்த திமுக அரசின் இந்த அரசாணையை எதிர்த்து, தென்னை நார் தொழில் உற்பத்தியாளர்களுக்கு ஆதரவாக, அறிவியல் பூர்வ காரணங்களுடனும் விளக்கங்களுடனும் இவற்றிற்காக தனியாக ஆராய்ச்சியை தொடங்க வேண்டும் எனவும் தேசிய கயிறு வாரியத் தலைவர் திரு. D. குப்புராமு அவர்கள் முயற்சியில், தேசிய கயிறு வாரியம் மனு தாக்கல் செய்தது. தென்னை நார் தொழில் நிறுவனங்களும், உற்பத்தியாளர்களும், அனைத்து சங்கங்களும் இந்த அரசாணைக்கு எதிராக மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

இந்த வழக்கில், மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம், 17/12/2021 அன்று வழங்கிய தீர்ப்பில், தென்னை நார் தொழில்களுக்கு, வெள்ளை வகையே தொடர வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் மாண்புமிகு உயர் நீதிமன்ற உத்தரவையும் மீறி, தென்னை நார் தொழில்துறைக்கு மட்டுமன்றி, தொழிலாளர், உற்பத்தியாளர் குடியிருப்பு பகுதிகளுக்கும் மின்சாரம் துண்டிக்கும் உத்தரவை தமிழக அரசு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்தது.

2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், தேசிய கயிறு வாரியம், தென்னை நார் சம்பந்தப்பட்ட தொழில்களை வகைப்படுத்த அறிவியல் பூர்வ ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், மத்திய, மாநில அரசுகளின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் நிபுணர்கள் குழு ஆய்வு செய்து அவற்றின் வழிகாட்டுதலுடன் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தது.

பரபரப்பாக வேலை செய்யும் பிரக்யான் ரோவர்! இறுதிக் கட்டத்தை நெருங்கும் சந்திரயான்-3 ஆய்வுப் பணிகள்!

Corrupted DMK govt crushing coir industry: Annamalai sgb

ஆனால் தமிழக மாசுக் கட்டுபாட்டு வாரியமோ, அந்தக் கோரிக்கைகளுக்கு உடன்படாமல், எந்த ஆய்வும் செய்யாமல், தென்னை நார் சம்பந்தமான தொழில்களை ஆரஞ்சு வகை பிரிவிலேயே தொடர வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

திமுக அரசின் இந்த நிலைப்பாட்டால், அன்னிய செலாவணி மற்றும் உள்நாட்டு உற்பத்தி, வேலை வாய்ப்பு மற்றும் தென்னை நார் பொருட்கள் உற்பத்தி பெரிதளவில் பாதிக்கப்பட்டன. மேலும் தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம், தென்னை நார் சம்பந்தப்பட்ட தொழிலினை ஆரஞ்சு வகை ( Orange Category) என உத்தரவு பிறப்பித்ததால், மின்கட்டண மானியம் கிடைக்காமலும், அதிகப்படியான மின் கட்டண உயர்வாலும், தென்னை நார் தொழிற்சாலைகள் இயக்கம் பெரிதளவில் பாதிக்கப்பட்டது.

ஒரு தொழிலையே சீர்குலைத்து, உற்பத்தியாளர்கள் மற்றும், தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை கேள்விக்குரியதாக்கிய திமுக, இன்று தென்னை நார் தொழிலை மீண்டும் வெள்ளை வகை தொழிலாக மாற்ற வேண்டும் என்று தமிழக அமைச்சர் திரு சி.வி.மெய்யநாதன் அவர்கள் தலைமையில், மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் சிங் யாதவ் அவர்களை சந்தித்துக் கோரிக்கை வைத்திருக்கிறது.

வெள்ளை வகையில் இருந்த தென்னை நார் தொழிலை ஆரஞ்சு வகைக்கு மாற்றி, ஒட்டு மொத்த தென்னை நார் தொழிலையே முடக்கிய திமுக, இன்று மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறுவது, வழக்கம்போல மக்களை ஏமாற்ற திமுக ஆடும் கபட நாடகம் ஆகும். தாங்கள் செய்த தவறுகளுக்கு, மத்திய அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மீது பழி போட்டு, தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறது திமுக.

ஒவ்வொரு முறையும் மக்கள் விரோதச் செயல்களைச் செய்துவிட்டு, மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும்போது, அதனை மடைமாற்றி பிறர் மேல் பழி போடும் மூன்றாம் தரப் போக்கை திமுக எப்போது நிறுத்தும்?

திமுக ஆட்சிக்கு வந்த 1967 ஆம் ஆண்டிலிருந்து, ஒவ்வொரு முறை ஆட்சியில் இருக்கும்போதும், இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் தொடங்கி, தமிழகத்தின் ஒவ்வொரு தொழில் வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டை போட்டு, தங்கள் குடும்பத்தினர் மற்றும் கட்சியினர் நடத்தும் தொழில்களுக்கு மட்டும் ஆதரவாகச் செயல்பட்டு, ஏழை எளிய தொழிலாளர்கள் வயிற்றிலடிப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ள திமுக, இன்று தென்னை நார் தொழில்துறையையும் முடக்கி விட்டு, மத்திய அரசு அதனைச் சரி செய்ய வேண்டும் என்று கூறுவது அப்பட்டமான சுயநல அரசியல்.

திமுகவின் இந்த அற்ப அரசியல் நாடகங்களை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இவ்வாறு அண்ணாமலை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஏழே நிமிடத்தில் புற்றுநோய்க்கு நிவாரணம்! பிரிட்டனில் முதல் முறையாக பயன்பாட்டுக்கு வரும் ஊசி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios