மதுரை ஐ.டி. நிறுவனத்தில் அண்ணாமலை மனைவி மறைமுக பங்குதாரர்? பரபரப்பு குற்றச்சாட்டு!
மதுரை ஐ.டி. நிறுவனத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மனைவி மறைமுக பங்குதாரராக உள்ளர் என கூறப்படும் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மதுரையில் இளைஞர் ஊக்குவிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஐ.டி., நிறுவனம் அமைந்துள்ள இடம், நில மோசடி செய்து பெறப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த ஐ.டி., நிறுவனத்தில் அண்ணாமலை மனைவி பங்குதாரர் எனவும் குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால், அந்த புகார் தவறானது என ஐ.டி. நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
மதுரை மாடக்குளம் பகுதியில் புதிதாக தொடங்கப்பட்டு உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தின் ஊழியர்களுக்கான ஊக்குவிப்பு நிகழ்ச்சியில், பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு உரையாற்றினார்.
முன்னதாக, அவர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என மாடக்குளத்தை சேர்ந்த சதாசிவம் என்பவர் மதுரை எஸ்.எஸ். காலனி காவல் நிலையத்தில் இன்று காலை புகார் அளித்திருந்தார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது: “மதுரை மாடக்குளம் ஐஸ்வர்யா நகரில் உள்ள அந்த ஐ.டி. நிறுவனத்தின் இடம், இரண்டரை கோடி ரூபாய் மதிப்பிலானது. எனது நிறுவனத்தின் பெயரில் உள்ள அந்த இடம் நில மோசடிக்கு உள்ளாகி உள்ளது. அதன் மீது கனரா வங்கியில் அடமானம் வைத்து கடன் பெற்றதை திரும்ப செலுத்தாத காரணத்தால், அதனை வங்கி ஏலம் விட்டு குறைந்த விலைக்கு அதாவது வெறும் 74 லட்ச ரூபாய்க்கு மேற்படி ஐ.டி. நிறுவனத்திற்கு விற்று விட்டார்கள். SARFAESI ACT மூலமாக வங்கி மேலாளர் முறைகேடாக அந்த இடத்தை ஐ.டி. நிறுவன உரிமையாளர் பிரியதர்ஷினிக்கு பதிவு செய்து கொடுத்ததோடு, அந்த சொத்தின் பெயரில் 55 லட்ச ரூபாய் கடன் கொடுக்கப்பட்டு கணக்கு நேர் செய்யப்பட்டுள்ளது. இது சட்டப்படி குற்றம்.
இது தொடர்பாக நான் சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தின் மூலமாக அந்த வழக்கு கடன் தீர்ப்பாயத்திற்கு மாற்றப்பட்டு நிலுவையில் உள்ளது.
எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை உடைக்கும் முயற்சி: சரத் பவாருக்கு ஃபோன் போட்ட ராகுல், சோனியா!
இந்நிலையில், என்னிடம் மேற்படி பிரியதர்ஷினியும், அவரது கணவர் விஷ்ணு பிரசாத், ஸ்டீபன் மற்றும் சாரு ஆகியோர் அவ்வப்போது கட்டப் பஞ்சாயத்து செய்து, கொலை மிரட்டல் விடுத்து, அங்கு கட்டடத்தை கட்டி, கடந்த ஜூன் 15ஆம் தேதி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திறந்து வைப்பதாக விளம்பரம் செய்திருந்தார்கள். நான் அண்ணாமலையை சந்தித்து விபரம் சொன்ன பிறகு, நிகழ்ச்சியை ரத்து செய்தார்.
மறுபடி பிரியதர்ஷினியின் கணவர் விஷ்ணு பிரசாத் என்னிடம் வந்து எங்கள் நிறுவன நிகழ்ச்சியில் ஜூலை 2ஆம் தேதி அண்ணாமலை பங்கேற்பார். எனது மனைவி பிரியதர்ஷினியும், அண்ணாமலை மனைவியும் இந்த நிறுவனத்தில் மறைமுக பங்குதாரர் எனச் சொல்லி மிரட்டல் விடுத்தார்.
முறைகேடாக நில மோசடி செய்து நடத்தி வரும் இந்த நிறுவனத்தை பாஜக மாநில தலைவர் திறந்து வைக்க வருவது தவறான முன்னுதாரணத்தை உருவாக்கும். எனவே அவர் நிகழ்ச்சிக்கு வருவதை தடுத்து நிறுத்த வேண்டும்.” என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு வந்த சதாசிவம் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் காரை நிறுத்தி பேச முற்பட்டதை அவர் தவிர்த்து விட்டு சென்றதாக தெரிகிறது. இதையடுத்து, சதாசிவம் செய்தியாளர்களை சந்தித்து, மேற்படி காவல் நிலைய புகார் குறித்து விளக்கமளித்தார்.
அதன்பின்னர், செய்தியாளர்களை சந்தித்த ஐ.டி. நிறுவன உரிமையாளர் பிரியதர்ஷினி கூறுகையில், “சதாசிவம் குற்றச்சாட்டு முற்றிலும் தவறு. வங்கி ஏலத்தில் பங்கு எடுத்து, முறைப்படி நிலத்தைப் பெற்றோம். இதில் யாருடைய பின்புலத்தையும் சிபாரிசையும் பயன்படுத்தவில்லை. நாங்கள் எந்தக் கொலை மிரட்டலையும் விடுக்கவில்லை. அவர்கள்தான் எங்களுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். சதாசிவம் சொல்வது போல், அண்ணாமலை மனைவி எங்கள் நிறுவனத்தில் பங்குதாரர் இல்லை.” என்றார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நிகழ்ச்சியில் பங்கேற்ற ஐ.டி. நிறுவனத்தார் மீது நில மோசடி புகார், மதுரை எஸ்.எஸ். காலனி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட விவகாரமும், அவரது மனைவி அந்த ஐ.டி நிறுவனத்தில் மறைமுக பங்குதாரர் என கூறப்படும் குற்றச்சாட்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.