Asianet News TamilAsianet News Tamil

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை உடைக்கும் முயற்சி: சரத் பவாருக்கு ஃபோன் போட்ட ராகுல், சோனியா!

தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் பாஜக - சிவசேனா கூட்டணியில் இணைந்து மகாராஷ்டிர துணை முதல்வரான நிலையில், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை பிளவுபடுத்த பாஜக முயற்சிப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது

Congress says attempt to split Opposition unity rahul sonia calls sharad pawar
Author
First Published Jul 3, 2023, 10:11 AM IST

எதிர்க்கட்சிகள் தங்கள் இரண்டாவது கூட்டத்தை ஜூலை 14 ஆம் தேதி நடத்த உள்ள நிலையில், மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் (என்சிபி) அஜித் பவாரால் அக்கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. இது, 2024 தேர்தலில் பாஜகவுக்கு எதிரான முன்னணியை உருவாக்கும் கட்சிகளின் முயற்சிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என பார்க்கப்படுகிறது.

ஆனால், இதனை எதிர்க்கட்சிகளை பிளவுபடுத்துவதும் பாஜகவின் மற்றொரு முயற்சி என்றும், வரும் நாட்களில் ஒற்றுமையை வலுப்படுத்தும் முயற்சிகளை கட்சிகள் தீவிரப்படுத்தும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன.

இப்ப நிலைமை சரியில்ல... பெங்களூரு எதிர்க்கட்சிகளின் கூட்டம் ஒத்திவைப்பு; காரணம் என்ன?

மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா அரசின் துணை முதல்வராக அஜித் பவார் நேற்று பதவியேற்றார். 40க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களின் ஆதரவு தனக்கு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உள்ளடக்கிட மகா விகாஸ் அகாடி கூட்டணியின் இந்த பலவீனம், தேசிய அளவில் வலிமையான எதிர்க்கட்சிகளின் கூட்டணி மீது தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

பாஜக - சிவசேனா கூட்டணியில் இணைந்து அமைச்சர்களான தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் பலரது மீது அமலாக்கத்துறை வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், பாஜகவின் தூய்மைப்படுத்தும் இயந்திரம் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளதாக, மகா விகாஸ் அகாடி கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியுள்ளது. மேலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருடன் தொலைபேசியில் பேசி ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான கூட்டணியில் புதிதாக இணைந்துள்ள பலரும் அமலாக்கத்துறை, சிபிஐ விசாரிக்கும் கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளனர் என்றும் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. “ஜூன் 29 ஆம் தேதி பிரதமர் மோடி ஊழல் பற்றி பேசினார். அவர் தற்போது வாஷிங் மெஷினை ஆன் செய்துள்ளதாக தெரிகிறது. இந்த பதவியேற்பு விழாவுக்குப் பிறகு, அவர் குற்றம் சாட்டிய பலரும் தூய்மை அடைந்து விட்டனர்.” என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் விமர்சித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios