அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஓய்வூதியம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட ககன்தீப் சிங் தலைமையிலான குழு இன்று அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கி உள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டங்கள் தொடர்பாக ஆய்வு நடத்த தமிழக அரசு சார்பில் கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு ஆசிரியர்கள், அரசு ஊழியர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இன்று வழங்கியது.

பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் தொடர்பாக விரிவாக ஆராய்ந்து மாநில அரசின் நிதி நிலையையும், பணியாளர்களின் ஓய்வூதியக் கோரிக்கையையும் கருத்தில் கொண்டு நடைமுறைப்படுத்தத்தக்க ஓய்வூதிய முறை தொடர்பான பரிந்துரையை அரசுக்கு கூடுதல் தலைமைச் செயலாளர் ககனதீப் சிங் பேடி, தலைமையில் 3 அதிகாரிகள் கொண்ட குழு வழங்கி உள்ளது.

இந்த குழுவானது அரசுப் பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை முழுமையாக கேட்டு அறிந்து ஆய்வு செய்தது. சுமார் 194 அரசுப் பணியாளர் சங்கங்களுடன் சுமார் 9 சுற்று கூட்டங்களை நடத்தி கடந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதி இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்தது. இதன் தொடர்ச்சியாக இன்று முழு திட்ட அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.