பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக தமிழகம் வருகிறார். உடல்நலக்குறைவால் முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் உள்ளதால், கோரிக்கை மனுவை தலைமைச் செயலாளர் மூலம் அனுப்பியுள்ளார்.

CM Stalin letter to Prime Minister Modi : பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக (ஜூலை 26 மற்றும் 27, 2025) இன்று தமிழகத்திற்கு வருகை தர உள்ளார். மாலத்தீவு அரசு முறை பயணத்தை முடித்துவிட்டு, பிரதமர் மோடி மாலை 7:50 மணியளவில் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகிறார். இரவு 8:30 முதல் 9:30 மணி வரை தூத்துக்குடி விமான நிலையத்தில் புதிய முனைய கட்டிடம், விரிவாக்கப்பட்ட ஓடுதளம், டாக்ஸிவே, ஏடிசி கோபுரம், பார்க்கிங் பேக்கள் உள்ளிட்ட 381 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இதனை தொடர்ந்து இரவு தூத்துக்குடியில் அரசு விடுதியில் தங்கி ஓய்வெடுக்கிறார். நாளைய தினம் காலை 11 மணியளவில் ஹெலிகாப்டரில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்திற்கு செல்கிறார்.

இரண்டு நாள் பயணமாக தமிழகம் வரும் மோடி

அங்கு நடைபெறும் ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி, ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை பிரதமர் வெளியிடுகிறார். அடுத்தாக முதலாம் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளையும், அவரது கடல்சார் பயணத்தின் 1000-வது ஆண்டு நினைவையும், கங்கைகொண்ட சோழபுரம் கோவில் கட்டுமானத்தின் தொடக்கத்தையும் கொண்டாடும் விழாவில் பங்கேற்கிறார். அடுத்தாக 'ரோடு ஷோ'-வில் கலந்து கொண்டு மக்களை சந்திக்கிறார். நாளை மதியம் 1:30 மணியளவில் ஹெலிகாப்டரில் திருச்சிக்கு சென்று, பிற்பகல் 2:30 மணியளவில் விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார். பிரதம் மோடியின் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடியின் இந்த பயணத்தின் போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளார்.

அதிமுக பாஜக கூட்டணி அமைந்துள்ள நிலையில், பிரதமர் மோடியை முதல்முறையாக எடப்பாடி பழனிசாமி சந்திக்கவுள்ளார். இதனிடையே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 5 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமச்சருக்கு நேற்று முன்தினம் ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டது. இதனையடுத்து நேற்றைய தினம் ஓய்வுக்கு பிறகு மீண்டும் அரசு பணியில் முதலமைச்சர் ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார். இன்று மருத்துமனையில் தலைமை செயலாளர் சண்முகத்தோடு ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

மருத்துவமனையில் இருப்பதால், தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர் அவர்களிடம் வழங்கவுள்ள கோரிக்கைகள் அடங்கிய மனுவைத் தலைமைச் செயலாளர் மூலமாகக் கொடுத்து அனுப்பியுள்ளேன். அமைச்சர் தங்கம் தென்னரசு பிரதமரிடம் வழங்குவார் என பதிவிட்டுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தமிழகத்திற்கு மத்திய அரசு கொடுக்க வேண்டிய நிதிகள், மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல், நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட பல கோரிக்கைகள் இடம்பிடிக்கும் என கூறப்படுகிறது.