தேவர் குருபூஜை.. பசும்பொன் செல்கிறார் முதலமைச்சர்.. பிரதமர் வருகை குறித்து பாஜக விளக்கம்..
முத்துராமலிங்கர் தேவரின் 115 வது குருபூஜையை முன்னிட்டு, வரும் அக்டோபர் 30 ஆம் தேதி அவரது நினைவிடத்திற்கு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்துகிறார். பிரதமர் மோடி வருவது குறித்து அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அக்டோபர் 30 ஆம் தேதி குருபூஜை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு முதலமைச்சர், எதிர்கட்சி தலைவர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், அமைப்புகளும் நினைவிடத்திற்கு நேரில் சென்று மரியாதை செலுத்துவர்.
மேலும் சுற்றுவட்டார பகுதி மக்களும் வருகை புரிந்து அஞ்சலி செலுத்தி செல்லுவர். இதனால் ஏதேனும் சாதி ரீதியான கலவரம் வருவதை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். 144 தடை உத்தரவு போட்டு, எல்லை பகுதியில் காவல்துறையினரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்.
மேலும் படிக்க:இந்தி திணிப்பை கண்டித்து அக்.15 அன்று ஆர்ப்பாட்டம்... அறிவித்தார் உதயநிதி ஸ்டாலின்!!
இதனிடையே ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 30ம் தேதி பயணம் செய்கிறார் என்று அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115வது குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவரது நினைவிடத்திற்கு நேரில் சென்று மரியாதை செலுத்துகிறார்.
மேலும் அன்றைய தினம் பசும்பொன் தேவரின் குருபூஜைக்கு பிரதமர் நரேந்திர மோடி வருவதாக தகவல் வெளியானது. முன்னதாக தமிழக பாஜக சார்பில் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இதுக்குறித்து இதுவரையிலும் அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை. பிரதமர் மோடி தமிழகம் வர இருப்பதாக உலா வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். கட்சியில் அதிகாரபூர்வ அறிவிப்பே இறுதியானது என்று தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க:2022-23ம் ஆண்டில் 4.8 லட்சம் பேருக்கு கல்வி வழங்க திட்டம்... அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சூப்பர் தகவல்!!