இந்தி திணிப்பை கண்டித்து அக்.15 அன்று ஆர்ப்பாட்டம்... அறிவித்தார் உதயநிதி ஸ்டாலின்!!

இந்தி திணிப்பை கண்டித்து அக்டோபர் 15 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

demonstration on oct 15 against imposition of Hindi announced udhaynidhi stalin

இந்தி திணிப்பை கண்டித்து அக்டோபர் 15 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய துணைக் கண்டத்தின் பன்முகத் தன்மையை சிதைக்கும் வகையில் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே உணர்வு, ஒரே பண்பாடு என்ற ஆர்.எஸ்.எஸ்.-ன் சித்தாந்தத்தை ஒன்றிய பாஜக அரசு செயல்படுத்த முற்படுகிறது. இது பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் ஒருமைப்பாட்டை சிதைத்து, ஒருமை தன்மையாக்க நினைக்கிறது ஒன்றிய பாஜக அரசு. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற குழு அளித்துள்ள அறிக்கையில் ஒன்றிய அரசு நடத்தும் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஏய்ம்ஸ் மற்றும் ஒன்றிய பல்கலைக் கழங்களான உயர்கல்வி நிறுவனங்களில் கட்டாயமாக இந்தி மட்டுமே பயிற்று மொழியாக இருக்க வேண்டுமென்றும், ஆங்கில வழி கல்விக்கு பதிலாக இந்தி வழி கல்வியே கற்பிக்கப்பட வேண்டுமென்று பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. 

இதையும் படிங்க: மொழியை வைத்து மக்களை பிரிக்க பார்க்கின்றனர்... துறை வைகோ குற்றச்சாட்டு!!

மேலும், ஒன்றிய அரசின் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளிலும் ஆங்கிலத்தை நீக்கி விட்டு, இந்தியில் மட்டும் தேர்வு நடத்தும் பரிந்துரையும் உள்ளது. இது இந்தியை படித்தால் மட்டுமே வேலை என்கிற நிலையை உருவாக்கி, இந்தியா முழுவதும் இந்தியை கற்க வேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்த முற்படுகிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு. இந்திய அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் தமிழ் உள்ளிட்ட 22 மொழிகள் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் சம உரிமை கொண்ட மொழிகளாகும் என்று ஒன்றிய பா.ஜ.க. அரசிற்கு நினைவுள்ளதா? இரண்டு நாட்களுக்கு முன்பாக ஒன்றிய கல்வித்துறை இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் அவர்கள், செய்தியாளர் சந்திப்பின் போது, அனைத்து பாடத் துறைகளுக்கும் ஒரே பொது நுழைவு தேர்வு இந்திய அளவில் நடத்தப்படும் என்ற அறிவிப்பை தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் அத்தனை மாநிலங்களிலுள்ள கல்லூரிகளின், அனைத்து பாடத் துறைகளுக்கும், தேசிய தேர்வு முகமை மூலமாக ஒரே பொது நுழைவு தேர்வு நடத்தப்படும் என்ற திட்டம், இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானதும், மாநில உரிமைகளை பறிக்கக்கூடியதாகவும், சமூகநீதிக்கு எதிரானதாக உள்ளது. இந்த நுழைவுத் தேர்வு முறை என்பது, ஏழை எளிய, ஒடுக்கப்பட்ட, உரிமை மறுக்கப்பட்ட மாணவர்களுக்கு இழைக்கும் அநீதியாகும். இது அனைவருக்குமான சமஉரிமை-சமவாய்ப்பு ஆகிய கோட்பாடுகளை அழிக்கக்கூடியது என்பதால் திராவிட முன்னேற்றக் கழகம் கடுமையாக எதிர்க்கிறது.

இதையும் படிங்க: அடித்து சொல்றேன் ரூ.12,000க்கு கழிவறையை கட்ட முடியாது... அண்ணாமலை பேசியது குறித்து திமுக எம்.பி. விமர்சனம்!!

ஒன்றிய அரசின் பள்ளிக் கல்வி முறையில் தொடங்கி, உயர் கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் இந்தி மொழியில் மட்டுமே பயிற்றுவிக்கப்படும் என்ற நிலையோடு, ஒன்றிய அரசின் பணியில் சேர பொதுத் தேர்வுகளின் மொழியும் இந்தி மட்டுமே இருக்கும் என்ற நிலையும், பணியில் சேர்ந்த பிறகும் இந்தி மட்டுமே ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக இருக்கும் என்ற நிலையை கட்டமைக்க பார்க்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு. பலமொழி கொண்ட இந்திய துணைக் கண்டத்தில், அவரவர் மொழி உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டிய பன்முகத் தன்மையை சிதைத்து விட்டு, இந்தி என்ற ஒரு மொழி ஆதிக்கத்தை கொண்டுவருகின்ற செயலின் மற்றொரு வடிவமாக புதிய தேசிய கல்விக் கொள்கை அமைந்துள்ளது.

இத்திட்டத்தை தி.மு.க. இளைஞர் அணியும்-மாணவர் அணியும் கடுமையாக எதிர்க்கிறது. எனவே, அலுவல் மொழி சட்டத்தின் வாயிலாகவும், இந்திய அளவில் அனைத்து பாடத் துறைகளுக்கும் ஒரே பொது நுழைவு தேர்வு திட்டத்தின் மூலமாகவும் இந்தி மொழியை திணிக்க நினைக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசிற்கு கழகத் தலைவர் தளபதி அவர்கள் கடும் கண்டனத்தையும், எச்சரிக்கையும் தெரிவித்துள்ளதை உணர்ந்து உடனடியாக அதனை கைவிட வேண்டுமென்றும், புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் சமூகநீதிக்கு எதிரான திட்டங்களை கொண்டு வர வேண்டுமென்று நினைக்கும் ஒன்றிய அரசின் முடிவினை திரும்பப் பெற வலியுறுத்தியும், கழகத் தலைவரின் ஆணையேற்று, தி.மு.க. இளைஞர் அணியும்-மாணவர் அணியும் இணைந்து, வரும் 15.10.2022 அன்று சனிக்கிழமை காலை 09.00 மணியளவில், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்ட ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கிறது என்று தெரிவித்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios