கும்மிடிப்பூண்டி அருகே பள்ளி மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிசிடிவி காட்சிகள் வெளியாகி, குற்றவாளியை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் 10 வயது சிறுமி. அப்பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 12-ம் தேதி வழக்கம் போல் பள்ளிக்குச் சென்றுள்ளார். அன்று மதியம் பள்ளி முடிந்து தனியாக வீடு திரும்பிக்கொண்டிருந்த சிறுமியை பின்தொடர்ந்து வந்த இளைஞர் ஒருவர், அவரை மாந்தோப்பு பகுதிக்கு தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்துள்ளார்.

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வீடியோக்கள் அடிப்படையில் மர்ம நபர் அடையாளம் காணப்பட்டது. இதனையடுத்து குற்றவாளியை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட பகுதிகளில் தீவிரமாக தேடப்பட்டு வந்தார்.

குற்றவாளியை விரைந்து கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். 10 நாட்களாகியும் இன்னும் குற்றவாளியைக் கண்டுபிடிக்காத காவல்துறையைக் கண்டித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. குற்றம்சாட்டப்பட்டவர் பற்றிய தகவல் தெரிவித்தால் ரூ.5 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்படும் என டிஜிபி சங்கர் ஜிவால் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். மேலும், தகவல் அளிப்போரின் அடையாளம் ரகசியமாக வைக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சென்னை ராஜூவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் உத்தரப்பிரதேச இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி காட்சியில் பதிவான நபரின் உருவத்தைப்போல் இருப்பதால் விசாரணை நடைபெற்று வருகிறது. மதுபோதையில் கீழே விழுந்ததாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.