ஆளுங்கட்சி நிம்மதியாக பணிகளை கவனிப்பதும், எதிர்க்கட்சி களத்தில் நின்று போராடுவதும் தான் அரசியல் இயல்பு ஆனால் தமிழகத்தில் எதிர்க்கட்சியான அதிமுக சரணாகதி அடைந்து சாய்ந்து கிடப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

புத்தாண்டை முன்னிட்டு திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து மடல்.

உலக மக்கள் அனைவருமே ஒவ்வொரு புத்தாண்டுப் பிறப்பையும் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றனர். தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கை மிகுந்த புத்தாண்டாக 2026-ஆம் ஆண்டு நிச்சயமாக அமையும் என்ற உறுதியினை வழங்கி, கழக உடன்பிறப்புகளுக்கும் பொதுமக்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.

இந்தப் புத்தாண்டு நம் கழக உடன்பிறப்புகளுக்கு வெற்றிக்கான புத்தாண்டு! திராவிட மாடல் அரசின் சாதனைகள் தொடர்கின்ற புத்தாண்டு! தமிழ்நாட்டு மக்களின் நலன் காக்கும் திட்டங்கள் தொடர்ந்திடும் புத்தாண்டு!

2021-ஆம் ஆண்டு மே 2-ஆம் நாள் தமிழ்நாட்டு மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம் 6-ஆவது முறையாக ஆட்சி அமைப்பதற்கான வெற்றியைத் தந்த நேரத்தில், கொளத்தூர் தொகுதியின் வெற்றிச் சான்றிதழை நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள் ஓய்வுகொள்ளும் நினைவிடத்தில் காணிக்கையாக்கியபின், செய்தியாளர்களிடம் உங்களில் ஒருவனான நான் சொன்ன சொற்களை, நானும் மறக்கவில்லை; நீங்களும் மறந்திடவில்லை; தமிழ்நாட்டு மக்களும் மறந்திருக்க மாட்டார்கள்.

“எங்களுக்கு வாக்களித்தவர்கள் சரியாகத்தான் வாக்களித்திருக்கிறோம் என்று மகிழ்ச்சி அடையக்கூடிய வகையிலும், வாக்களிக்காதவர்கள் இவர்களுக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோமே என்று நினைக்கக்கூடிய அளவிலும் தி.மு.க.வின் ஆட்சி இருக்கும்” - இதுதான் உங்களில் ஒருவனான நான் அன்று அளித்த வாக்குறுதி. இதைத்தான், ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்கிற திராவிட மாடல் ஆட்சியின் இலக்கணமாகக் கொண்டு நமது அரசு செயல்பட்டு வருகிறது.

உங்களில் ஒருவனான நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற நாள் முதல் மக்கள் நலனுக்கான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறேன். மகளிருக்கு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா விடியல் பயணத்திற்கான கையெழுத்தில் தொடங்கி, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், புதுமைப்பெண், நான் முதல்வன், மக்களைத் தேடி மருத்துவம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், தோழி விடுதி, அன்புச்சோலை, அன்புக்கரங்கள், தாயுமானவர் திட்டம், கலைஞர் கனவு இல்லம் எனப் பல முன்னோடி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த 4 ஆண்டுகளில் தொழில்முதலீடுகளை ஈர்த்து, தமிழ்நாட்டில் பரவலாக்கப்பட்ட தொழில்வளர்ச்சியை உருவாக்கி, இளைய தலைமுறையினருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறோம்.

இந்திய மாநிலங்களில் கல்வி, சுகாதாரம் உள்பட பல இலக்குகளில் தமிழ்நாடு முதன்மையாகத் திகழ்கிறது என்பதை நாம் சொல்லவில்லை; ஒன்றிய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையும், ஒன்றிய அரசின் துறைகள் சார்ந்த அறிக்கைகளும் தெரிவிக்கின்றன. இந்திய அளவில் புகழ்பெற்ற பத்திரிகைகள், ஆய்வு நிறுவனங்கள், உலகளாவிய பொருளாதார இதழ்கள் தமிழ்நாட்டின் அனைவருக்குமான ஒருங்கிணைந்த - அனைத்துப் பகுதிகளுக்கும் பரவலாக்கப்பட்ட வளர்ச்சி குறித்து, தரவுகளுடனான செய்திகளை வெளியிட்டுள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக, திராவிட மாடல் அரசின் திட்டங்களால் பயன்பெற்று வரும் தமிழ்நாட்டு மக்கள் இந்தச் சாதனைத் திட்டங்கள் பற்றி மனம் மகிழ்ந்து சொல்கிறார்கள்.

இதற்கு முன்பு வரை, அரசு நிகழ்ச்சிகள் என்றால் முதலமைச்சரும் அமைச்சர்களும் அதிகாரிகளும் மேடையில் இருப்பார்கள். திட்டங்களால் பயன் பெறப்போகும் மக்கள் எதிரில் அமர்ந்திருப்பார்கள். இப்போது அது முற்றிலும் மாறியிருக்கிறது. கல்வியில் சிறந்த தமிழ்நாடு, வெல்லும் தமிழ்ப் பெண்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் முதலமைச்சரும் அமைச்சர்களும் அதிகாரிகளும் பார்வையாளர்களாக உட்கார்ந்திருந்தோம். அரசின் திட்டங்களால் பயன்பெற்றவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றத்தை, மேடையில் நின்று உள்ளத்து உணர்வுடன் விளக்கினார்கள். இந்த மாற்றம்தான் திராவிட மாடல் ஆட்சியின் மகத்தான சாதனை!

உங்களில் ஒருவனான நான், 2026-ஆம் ஆண்டிலும் இந்தச் சாதனைகள் தொடர வேண்டும் என்றும், மேலும் ஐந்தாண்டுகள் புதிய புதிய சாதனைத் திட்டங்கள் நிறைவேற வேண்டும் என்றும் உறுதி ஏற்றிருக்கிறேன். கழகத்தின் அன்பு உடன்பிறப்புகளான உங்கள் மீதுள்ள நம்பிக்கைதான் என்னுடைய உறுதிக்குக் காரணம். தமிழ்நாட்டின் தொடர்ச்சியான முன்னேற்றப் பாதையில் நாம் செல்லவேண்டிய தூரம் இன்னும் அதிகமாக உள்ளது. நிறைவேற்றிய திட்டங்கள் உரிய பலனைத் தருகிற அதேநேரத்தில், நிறைவேற்ற வேண்டிய கடமைகள் நிறைய உள்ளன.

பத்தாண்டுகாலம் தமிழ்நாட்டை படுகுழியில் தள்ளிய முந்தைய அ.தி.மு.க ஆட்சியின் சீரழிவிலிருந்து, தமிழ்நாட்டை மீட்பதற்கே இந்த ஐந்தாண்டுகள் பெரும்பாடு பட்டிருக்கிறோம்; தமிழ்நாட்டை மீட்டிருக்கிறோம். அதனால்தான் நம் மீது தமிழ்நாட்டின் அனைத்துத்தரப்பு மக்களுக்கும் நம்பிக்கை உள்ளது. உரிமையுடன் தங்கள் கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள். தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள்.

நமக்குள்ள பொறுப்பை உங்களில் ஒருவனான நான் ஒருபோதும் தட்டிக் கழிப்பதில்லை. கொடுத்த வாக்குறுதியிலிருந்தும் நிறைவேற்றவேண்டிய கடமையிலிருந்தும் ஒருபோதும் பின்வாங்க மாட்டேன். எந்தக் கோரிக்கையாக இருந்தாலும் அதனைக் கவனத்தில் கொண்டு பரிசீலித்து நிறைவேற்றுவதற்கான காலம் நிச்சயம் கனியும்.

ஆளுங்கட்சி நிம்மதியாகத் தனது பணிகளைக் கவனிப்பதும், எதிர்க்கட்சி களத்தில் நின்று போராடுவதும்தான் அரசியலின் இயல்பு. ஆனால், தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி சரணாகதி அடைந்து சாய்ந்து கிடக்கிறது. ஆளுங்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம்தான் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசுடன் தொடர்ந்து உறுதியாகப் போராடிக் கொண்டிருக்கிறது. கடந்த 5 ஆண்டுகால ஆட்சியும் நமக்கு உரிமைப் போராட்டம்தான்.

ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் மகாத்மா காந்தி பெயரிலான 100 நாள் வேலைத் திட்டத்தை பெயர் மாற்றமும் உருமாற்றமும் செய்து, திட்டத்தையே முடக்குகின்ற ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து களமிறங்கிப் போராடிக் கொண்டிருப்பது தி.மு.க.வும் அதன் தோழமைக் கட்சிகளும்தான்.

தேசியக் கல்விக் கொள்கை வழியாகத் தமிழ்நாட்டின் மீது இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிக்கும் நோக்கத்தை எதிர்த்து, பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் வகுத்துத் தந்த இருமொழிக் கொள்கையில் உறுதியாக நாம் நிற்பதால், தமிழ்நாட்டிற்குரிய கல்வி நிதியை வழங்காமல் வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசை எதிர்த்துப் போராடுவதும் தி.மு.கழகம்தான்.

தமிழ்நாட்டின் நிதி உரிமை - வரி உரிமை - சட்ட உரிமை என அனைத்திற்கும் போராடுவது நாம்தான்.

எல்லாவற்றுக்கும் மேலாக, இந்திய மக்களின் ஜனநாயக உரிமையான வாக்குரிமையைப் பறிக்கும் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையை எதிர்த்து சட்டரீதியான போராட்டத்தை நடத்துவதும், களத்தில் நின்று ஒவ்வொரு வாக்குச்சாவடிக்குட்பட்ட வாக்காளரின் உரிமையைக் காப்பதும் திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும்தான்.

இந்திய ஜனநாயகத்தின் பாதுகாவலனாக தி.மு.க. முன்னிற்கிறது. நம் தோழமைக் கட்சிகள் துணை நிற்கின்றன.

ஒரு கையில் வாளை ஏந்தி, உரிமைப் போர்க்களத்தில் நிற்கிறோம். மறுகையில் கேடயத்தை ஏந்தி, மக்கள் நலனைப் பாதுகாக்கிறோம். போர்க்களத்தில் வென்றிட வேண்டும். மக்கள் நலன் காக்கும் திட்டங்களைத் தொடர்ந்திட வேண்டும். தமிழ்நாட்டின் மக்கள் படை நமக்கு ஆதரவாக உள்ளது. அதைச் சிதறடிக்க வேண்டும் என எதிரிகளும் உதிரிகளும் வகுக்கும் வியூகங்களைத் தகர்த்தெறிந்து, ஜனநாயகப் போர்க்களத்தில் நாம் செயலாற்றிடுவோம்.

திருவண்ணாமலையில் நடைபெற்ற இளைஞரணியின் வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு எனும் பிரம்மாண்ட நிகழ்வும், திருப்பூர்-பல்லடத்தில் நடைபெற்ற மகளிரணியின் மேற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு எனும் பிரமிப்பான நிகழ்வும் கழகத்தின் இளைஞர்களும், மகளிரும் உத்வேகத்துடன் களத்தில் நிற்பதை உறுதி செய்கிறது. தகவல் தொழில்நுட்ப அணி, மாணவரணி, மருத்துவ அணி, வழக்கறிஞரணி, சிறுபான்மை நல உரிமைப் பிரிவு உள்ளிட்ட பல அணிகளும் மண்டலவாரியான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி களப்பணியில் ஈடுபட்டு வருவதையும் அறிகிறேன்.

கழக நிர்வாகிகளை ‘ஒன் டூ ஒன்’ சந்திக்கும் ‘உடன்பிறப்பே வா’ நிகழ்வில் இதுவரை 115 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த கழக நிர்வாகிகளை உங்களில் ஒருவனான நான் நேரில் சந்தித்து, அவர்களின் கழகப் பணிகளையும் கள நிலவரத்தையும் அறிந்து, உரிய ஆலோசனைகளை வழங்கியிருக்கிறேன். தொகுதிவாரியான நிர்வாகிகள் சந்திப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தலைமைக் கழகமான அண்ணா அறிவாலயம் முதல் கடைக்கோடி வாக்குச்சாவடி பாகம் வரை கழக உடன்பிறப்புகள் ஓயாது பணிகளை மேற்கொண்டு வருவதை அறிவேன். உடன்பிறப்புகளான உங்களுக்கும், உங்களில் ஒருவனான எனக்கும் தேர்தல் முடியும்வரை ஓய்வில்லை; உழைப்பு.. உழைப்பு.. கழகத்தின் வெற்றிக்கான உழைப்புதான்!

அந்த உழைப்பு மக்களுடன் இணைந்த, அவர்களின் பங்கேற்புடனான நிகழ்வுகளாக அமைய வேண்டும். ஏனெனில், திராவிட முன்னேற்றக் கழகம் என்பது அனைத்து மக்களுக்குமான இயக்கம்! தமிழர்களின் நலன் காக்கும் இயக்கம்!

தமிழர் பண்பாட்டைப் போற்றும் வகையில் கீழடியிலும், பொருநையிலும் அருங்காட்சியகம் அமைத்துள்ளோம். தமிழ்மொழி வளர்ச்சிக்காகவும், தமிழ்ச் சமுதாய முன்னேற்றத்திற்காகவும், தாய்நாட்டின் விடுதலைக்காகவும் பாடுபட்ட வீரத் தியாகிகளுக்குச் சிலை அமைத்தும் மணிமண்டபங்கள் உருவாக்கியும் சிறப்பு சேர்த்துள்ளோம்.

பண்டிதர் அயோத்திதாசர், தமிழைப் போற்றிய ஐரோப்பியரான வீரமாமுனிவர், மாமன்னன் பெரும்பிடுகு முத்தரையர், தாத்தா இரட்டைமலை சீனிவாசன், உத்தமத் தியாகி ஈஸ்வரன், ஐயா எல்.இளையபெருமாள், முன்னாள் அமைச்சர் சி.சுப்பிரமணியன், மாவீரன் பொல்லான், சர்.ஏ.டி.பன்னீர்செல்வம், எம்.கே.தியாகராஜபாகவதர், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி ஆகியோர் பெயரிலும் இடஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயிர் ஈந்த தியாகிகள் பெயரிலுமாக இதுவரை 20 நினைவு மண்டபங்கள் - அரங்குகள் அமைக்கப்பட்டிருப்பதுடன், வெள்ளையரை எதிர்த்த வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், வீரமங்கை குயிலி, வாளுக்கு வேலி அம்பலம், கப்பலோட்டிய தமிழர் வ.உசிதம்பரானார், தமிழ்நாட்டின் பெருமைக்குரிய டாக்டர் ப.சுப்பராயன், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம், நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், டாக்டர் முத்துலட்சுமி ஆகியோர் உள்ளிட்ட 29 பேருக்குத் திருவுருவச் சிலைகைள் அமைக்கப்பட்டு அவர்களின் புகழ்போற்றும் அரசாகத் திராவிட மாடல் அரசு செயலாற்றி வருகிறது.

கொள்கையில் மாறுபட்டிருந்தாலும் - அரசியலில் வேறுபட்டிருந்தாலும் தமிழ்நாட்டின் உயர்வுக்காகப் பங்களிப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை மதிக்க வேண்டும் என்கிற உயர்ந்த பண்பாட்டை நமக்கு கற்றுத் தந்தவர் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள். தன் வாழ்நாளில், அரசியல் கருத்துமாறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அதை நிறைவேற்றிக் காட்டியவரும் அவர்தான்.

வாழ்நாளெல்லாம் தமிழர்களின் உரிமைக்காகவும் -உயர்வுக்காகவும் பாடுபட்டு, தமிழ்மொழி காத்திட களத்தில் நின்று போராடி, தமிழுக்குச் செம்மொழித் தகுதி கிடைக்கச் செய்து, நவீனத் தமிழ்நாட்டைக் கட்டமைத்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டில் தொகுதிகள் தோறும் அவரது சிலை நிறுவப்படும் எனத் தீர்மானித்து 16-7-2021 முதல் 15-12-2025 வரை, கழகத்தின் சார்பில் 40-க்கும் மேற்பட்ட முழு உருவச் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. அண்மையில் திருவண்ணாமலை மாவட்டத்திற்குச் சென்றபோது, அங்கு திறந்து வைக்கப்பட்ட நம் உயிர்நிகர் தலைவர் அவர்களின் சிலைகளுடன் சேர்த்து, அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சிலை திறக்கப்பட்டுள்ளது. திருச்சி தெற்கு மாவட்டத்திலும், மயிலாடுதுறை மாவட்டத்திலும் அனைத்துத் தொகுதிகளிலும் தலைவர் கலைஞரின் சிலைகள் திறக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் பல தொகுதிகளில் முத்தமிழறிஞர் கலைஞரின் சிலைகள் தயார் நிலையில் உள்ளன. திராவிட இயக்கத்தின் தனிப்பெரும் விழாவாக, தமிழர் திருநாளாகப் பொங்கல் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடச் செய்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்.

தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் வழியில், தமிழரின் பண்பாட்டு அடையாளமான பொங்கல் நன்னாளைக் கழகத்தின் சார்பில், 2026 புத்தாண்டு தொடக்கத்திலிருந்தே ‘திராவிடப் பொங்கல்’ விழாவை, சமூகநீதிக்கான கொண்டாட்டமாக உடன்பிறப்புகள் முன்னெடுக்க வேண்டும் என உங்களில் ஒருவன் என்ற உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

கழக நிர்வாகிகள் தங்களுடன் பணியாற்றும் உடன்பிறப்புகளுக்குப் பொங்கல் பரிசுகள் வழங்கி மகிழ்வதுடன், தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் பங்கேற்றிடும் வகையில் கலை - இலக்கிய நிகழ்வுகளை நடத்திட வேண்டும். குறிப்பாக, இளைய தலைமுறை ஆண்களும் பெண்களும் கலந்துகொள்ளும் விளையாட்டுப் போட்டிகளைச் செம்மையாக நடத்தி, வெற்றியாளர்களுக்கும் பங்கேற்பாளர்களுக்கும் பரிசுகளை வழங்கிட வேண்டும்.

மாநிலம் முழுவதும் கழகத்தின் சார்பில் மூன்று கட்டங்களாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட வேண்டும். கபடி, கிரிக்கெட், வாலிபால், கால்பந்தாட்டம், ஓட்டப்பந்தயம், மிதிவண்டிப் போட்டி, கோ-கோ என ஆண்-பெண் இருபாலருக்கும் தனித்தனியாக விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் வகையில் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். ஒவ்வொரு பிரிவினருக்கும் குறைந்தபட்சம் 3 விளையாட்டுப் போட்டிகளை, ஒருங்கிணைந்த ஒன்றியம், ஒருங்கிணைந்த நகரம், ஒருங்கிணைந்த பகுதி (மண்டல) அளவில் ஜனவரி 3-ஆம் நாள் முதல் ஜனவரி 9 வரை நடத்திட வேண்டும்.

கலந்துகொள்ளும் அனைத்து அணிகளும் http://dravidapongal.in என்ற தளத்தில் பதிவு செய்திட வேண்டும்.

இதில் வெற்றிபெற்ற அணிகளைக் கொண்டு ஜனவரி 10-ஆம் நாள் முதல் பொங்கல் திருநாள் வரை கழக மாவட்ட அளவிலான போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்கிட வேண்டும். கழக மாவட்ட அளவில் வெற்றி பெறும் அணிகளைக் கொண்டு பிப்ரவரி மாதத்தில் மாநில அளவிலான பிரம்மாண்ட போட்டிகள் நடைபெறும்.

ஜனவரி 14-15 ஆகிய நாட்களில் தமிழ்நாடு முழுவதும் ஊராட்சிகள்-வார்டுகள் அளவில் மகளிரைத் திரட்டி சாதி, மத ஏற்றத்தாழ்வற்ற ‘திராவிடப் பொங்கல்’ வைத்துக் கொண்டாட வேண்டும். அனைத்து வீடுகள் முன்பும், ‘சமத்துவம் பொங்கட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!’ என்ற முழக்கங்களுடன் ‘திராவிடப் பொங்கல்’ கோலமிட்டு, பெண்களும் குழந்தைகளும் பங்கேற்கும் வகையிலான சிறுசிறு போட்டிகளை நடத்திப் பரிசளிக்க வேண்டும்.

ஜனவரி 16-17 ஆகிய இரு நாட்களும் ஊரின் பொதுவான இடத்தில் தமிழர் பெருமை சொல்லும் கலை - இலக்கிய விழாக்களை நடத்துவதுடன், திரை அமைத்து, திராவிட மாடல் அரசின் பொங்கல் சிறப்புச் செய்தியை அனைவரும் காணும்படி செய்யவேண்டும். இந்த நிகழ்வுகளை ஒன்றிய-நகர-பகுதிக் கழகச் செயலாளர்களும் சார்பு அணி நிர்வாகிகளும் இணைந்து எழுச்சியுடன் நடத்துவதற்கான முழு விவரங்களும் தலைமைக் கழகத்தால் மாவட்டக் கழகங்களுக்குத் தெரிவிக்கப்படும்.

அந்த வழிகாட்டுதல்களின்படி, திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை விளக்கிடும் வகையிலும், தமிழர்கள் அனைவரும் பங்கேற்றிடும் வகையிலான கலை – இலக்கிய - விளையாட்டுப் போட்டிகளுடன் திராவிடப் பொங்கல் விழாவை ஊர்தோறும் சிறப்பாக நடத்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

பிறக்கின்ற புத்தாண்டு 2026 - அது, திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்திடும் ஆண்டு! இருளில் பிறக்கும் புத்தாண்டை விடியச் செய்யும் உதயசூரியன் போல, தமிழ்நாட்டின் விடியல் வெளிச்சமாகக் கழக ஆட்சி தொடர்ந்திடும். அனைவருக்கும் மீண்டும், உங்களில் ஒருவனான என்னுடைய இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!” என்று குறிப்பிட்டுள்ளார்.