Asianet News TamilAsianet News Tamil

சாப்பாடு எப்படி இருக்கு? அம்மா உணவகத்தில் முதல்வர் திடீர் விசிட்! ஆய்வுக்கு பின் அதிரடி உத்தரவு போட்ட ஸ்டாலின்

அம்மா உணவகங்களின் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக சுமார் ஒரு லட்சத்து ஐயாயிரம் பயனாளிகள் உணவு அருந்தும் நிலையில், ஒரு ஆண்டில் சுமார் நான்கு கோடி முறை உணவு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Chief Minister Stalin inspection at Amma Unavagam tvk
Author
First Published Jul 19, 2024, 2:14 PM IST | Last Updated Jul 19, 2024, 3:37 PM IST

அம்மா உணவகங்களில் ஏழை எளியோர் பயன்பெறும் வகையில், சுவையான தரமான உணவை தயாரித்து வழங்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் கடந்த 2013-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அம்மா உணவகத்தை முடக்க முயற்சிப்பதாக அதிமுக குற்றச்சாட்டி வந்தது. இந்த சூழலில்தான் அம்மா உணவகத்தை மேம்படுத்த ரூ.5 கோடியை சென்னை மாநகராட்சி அண்மையில் ஒதுக்கியது. இந்நிலையில் விமர்சனங்களை தவிடுபோடியாக்கும் விதமாக முதல்வர் ஸ்டாலின் தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.  

இதையும் படிங்க: School Colleges Holiday: ஆகஸ்ட் 5ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்!

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: பெருநகர சென்னை மாநகராட்சியில் 200 கோட்டங்களிலும், 7 அரசு மருத்துவமனைகளிலும் சென்ற ஆட்சிக் காலத்தில் துவங்கப்பட்ட 388 அம்மா உணவகங்கள் தற்போது தொடர்ந்து செயல்பட்டு ஏழை எளியோருக்கு பயனளிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுத்து வருகின்றது. மேற்கூறிய உணவகங்களின் மூலம் நாளொன்றுக்கு  சராசரியாக சுமார் ஒரு லட்சத்து ஐயாயிரம் பயனாளிகள் உணவு அருந்தும் நிலையில், ஒரு ஆண்டில் சுமார் நான்கு கோடி முறை உணவு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அம்மா உணவங்களுக்கு தேவைப்படும் அரிசி, கோதுமை ஆகியவை மானிய விலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலமாகவும், மளிகை பொருட்கள், காய்கறிகள், சமையல் எரிவாயு உருளைகள் போன்றவை திருவல்லிக்கேணி நகரக் கூட்டுறவு சங்கத்தின் மூலமாகவும் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், தயிர் ஆவின் நிறுவனத்திடம் பெறப்படுகிறது. இந்த உணவகங்களில் பணிபுரியும் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு நாளொன்றுக்கு 300 ரூபாய் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக கடந்த மூன்றாண்டுகளில் 148.4 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. மேற்கூறிய பல்வேறு செலவினங்களுக்கும் 2021 மே மாதம் முதல் இதுவரை வரை சென்னை மாநகராட்சியால் சுமார் 400 கோடி ரூபாயும், அரிசி மற்றும் கோதுமைக்கான தமிழ்நாடு அரசின் மானியமாக 69 கோடி ரூபாயும் என, மொத்தமாக 469 கோடி ரூபாய் செலவிடப்பட்டு இந்த உணவகங்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட இந்த அரசு வழிவகுத்துள்ளது.

இதையும் படிங்க: Pa. Ranjith: திமுகவிற்கு அடுத்த ஆட்சியில் ஆதரவு கொடுக்க மாட்டேன்.. இது ஒரு எச்சரிக்கை.. பா.ரஞ்சித்!

இன்று சென்னை மாநகராட்சி 122ஆவது வார்டில் உள்ள தேனாம்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார்கள். அந்த உணவகம் செயல்படும் முறை, வழங்கப்படும் உணவின் தரம் ஆகியவற்றை சோதனை செய்ததோடு, அங்கு  உணவருந்த வந்த பயனாளிகளோடும் உரையாடினார்கள். பல்வேறு அம்மா உணவகங்களில் உள்ள பாத்திரங்கள் மற்றும் சமையல் கருவிகள் பழுதடைந்த நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இவற்றை மாற்றி புதிய பாத்திரங்கள் மற்றும் கருவிகளை 7 கோடி ரூபாய் செலவில் வழங்கிட ஆணையிட்டார்கள். 

மேலும், 14 கோடி ரூபாய் செலவில் இந்த உணவகங்களை புனரமைத்திடவும் ஆணையிட்டுள்ளார்கள். தங்கள் பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களுக்கு அவ்வப்போது நேரில் சென்று ஆய்வுசெய்து தேவையான உதவிகளை செய்து தருமாறு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios