மஞ்சள் நிறம் தீட்டப்பட்டு நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள 100 பேருந்துகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னையில் தொடங்கி வைக்கிறார்.
புதிய நிறத்தில் அரசு பேருந்து
தமிழகத்தில் அரசு போக்குவரத்துக்கழகம் 8 கோட்டங்களில் பேருந்துகளை இயக்கி வருகிறது. அரசு விரைவு போக்குவரத்து கழகமானது நீண்ட தூர பேருந்துகளை இயக்கி வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது அரசு போக்குவரத்து கழகங்களால் இயக்கப்படும் மாநகர பேருந்துகள் நீல நிறங்களிலும், சிவப்பு நிறங்களிலும் இயங்கி வருகின்றன. கடந்த அதிமுக ஆட்சியில் பச்சை நிறத்தில் பேருந்துகள் இயக்கப்பட்டன. அதன் பின், பி.எஸ்., 4 ரக பேருந்து வருகையால், நீல நிறம் மாற்றப்பட்டது. இதனையடுத்து திமுக ஆட்சி அமைந்ததும் மகளிர்களுக்கு இலவச பேருந்து திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

பழைய பேருந்து சீரமைப்பு
இதனை பொதுமக்கள் எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில், மகளிர்களுக்கான இலவச பேருந்து என அடையாளம் காண முன் மற்றும் பின் பகுதி பாதி பிங்க் நிறத்தில் டவுன் பேருந்துகள் மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் வசதிக்காக 1,000 புதிய பேருந்துகளை வாங்கவும், 500 பழைய பேருந்துகளை புதுப்பிக்கவும், ரூ.500 கோடி ரூபாய் தமிழக அரசு சார்பாக ஒதுக்கப்பட்டது. இதில் சேதமடைந்த பேருந்துகள் சீரமைக்கப்பட உள்ளன. அதன் ஒரு பகுதியாக, பழைய வண்ணம் மாற்றப்பட்டு, மஞ்சள் மற்றும் வெளிர் மஞ்சள் நிறத்துக்கு பேருந்துகள் மாற்றப்பட உள்ளது.

புதிய பேருந்து- முதலமைச்சர் நாளை தொடக்கம்
இதை போல இருக்கைகள், ஜன்னல்கள் மற்றும் கம்பிகள் ஆகியவை சேதமடைந்த பழைய பேருந்துகளை சரி செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் முதல் கட்ட பணிகள் நிறைவடைந்துள்ளது. இந்தநிலையில் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிதாக மஞ்சள் நிறத்தில் வண்ணம் தீட்டப்பட்ட பேருந்துகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கவுள்ளார். இதற்காக சென்னை தீவு திடலில் புதிய பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் இன்று பார்வையிட்டார்.
இதையும் படியுங்கள்
