மானுட நெறிகளின் படி தமிழ்நாட்டை உருவாக்க என்னை நானே ஒப்படைத்து உழைத்து வருகிறேன்- முதலமைச்சர் ஸ்டாலின்
சமூக வளர்ச்சியும் சிந்தனை வளர்ச்சியும் மக்கள் மனதில் ஏற்பட வேண்டும் எனவும், அது அவ்வளவு சீக்கரம் ஏற்பட்டுவிடாது அதற்கான விழிப்புணர்வை திமுக அரசு தொடர்ந்து செய்து வருவதாகவும் தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆதிதிராவிட நலத்துறை திட்டங்கள்
சென்னை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் 184 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார்.
குறிப்பாக, கடலூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், விருதுநகர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 10 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில், வகுப்பறை கட்டிடங்கள், ஆய்வுக்கூடம் மற்றும் திருப்பூர் ஈரோடு மதுரை தென்காசி ராமநாதபுரம் மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள 6 ஆதிதிராவிடர் சமுதாய நலக்கூடங்கள் என மொத்தம் ரூ.32.95 கோடி மதிப்பீட்டில் பள்ளிகள் விடுதிகள் மற்றும் சமுதாய கூடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார். ரூ.138 கோடி மதிப்பீட்டில் கல்லூரிகளுக்கான நவீன விடுதி கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
வாழ்க்கை தரத்தை உயர்த்த திட்டம்
இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர், மானுட நெறிகளின் படி தமிழ்நாட்டை உருவாக்க தான் என்னை நான் ஒப்படைத்து உழைத்து வருவதாகவும், எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் திட்டங்களை தீட்டி நிறைவேற்றி வருவதாகவும் கூறினார். எல்லார்க்கும் எல்லாம் என்பதை நிர்வாக நெறியாக கொண்டு திட்டங்களை தீட்டி வருகிறோம். அந்த அடிப்படையில், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்கள்,
சமூக, கல்வி மற்றும் பொருளாதார நிலைகளில் உயர்த்தி, அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி மேம்படுத்த தனிக்கவனம் செலுத்தி பல்வேறு நலத்திட்டங்கள் தீட்டி செயல்படுத்தி வருகிறோம். மேலும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரை பாராட்டுவதாகவும் கூறினார். அதேபோல் அமைதியாகவும் அதே வேலையில் ஆக்கப்பூர்வமாகவும் பணிகளை செய்து வருபவர் கயல்விழி என கூறிய அவர், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளையும் முதலமைச்சர் பட்டியலிட்டார்.
உயர்த்தும் பணிகளை செய்கிறோம்
தன்னம்பிக்கை - சுயமரியாதை - அதிகாரத்தில் பங்கு போன்ற நிலைகளில் ஆதிதிராவிட பட்டியலின மக்களை உயர்த்துகின்ற பணிகளை அரசு செய்துகொண்டு வருகிறது. இப்படி தொடர்ச்சியான பணிகள் மூலமாகதான் சுயமரியாதைச் சமதர்ம சமுதாயத்தை நாம் உருவாக்கியாகவேண்டும். நிதி ஒதுக்கீடுகளால், தொலைநோக்குப் பார்வையால், கண்காணிப்பால், மற்ற வளர்ச்சிகளை நாம் எட்டிடலாம். ஆனால், சமூக வளர்ச்சியும், சிந்தனை வளர்ச்சியும் மக்கள் மனங்களில் உருவாகவேண்டும். மக்களுடைய மனதளவில் மாற்றங்கள் ஏற்படவேண்டும். இது அவ்வளவு சீக்கிரமாக ஏற்படாது என்பதும் உண்மைதான்.
விழுப்புணர்வு பயணம்
அதே நேரத்தில் சமூக வளர்ச்சி - சிந்தனை வளர்ச்சியை உருவாக்குகின்ற நம்முடைய விழிப்புணர்வு பயணம் என்பது, தொய்வில்லாமல் தொடரவேண்டும். அந்தப் பணிகளையும் நம்முடைய திராவிட மாடல் அரசு செய்துகொண்டு வருகிறது. அண்ணல் அம்பேத்கரின் கனவான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய பண்புகள் நிறைந்த, சமூகநீதியின் அடிப்படையிலான ஒரு சமத்துவ சமுதாயமாக தமிழ்நாட்டை உருமாற்றும் வகையில் நம்முடைய விழிப்புணர்வுப் பயணத்தை தொய்வின்றித் தொடருவோம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்