பட்ஜெட்டில் தமிழகத்தின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? திட்டங்களை பட்டியலிட்டு கேள்வி எழுப்பிய முதல்வர் ஸ்டாலின்!!
மத்திய நிதி நிலை அறிக்கையில், மூன்று ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் இருக்கும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவுச் சாலைத் திட்டத்திற்கான ஒப்புதல் உள்ளிட்ட பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என நம்புவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொடங்குகிறது நாடாளுமன்ற கூட்டம்
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையை இழந்து கூட்டணி உதவியோடு ஆட்சி அமைத்துள்ளது. எதிர்கட்சியான காங்கிரஸ் கூட்டணி சரிசமமாக நாடாளுமன்றத்தில் உள்ளது. இந்தநிலையில் புதிய அரசு தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நாளை தொடங்கி ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடக்க உள்ளது.
இதில் நாளை மறுநாள் (23ம் தேதி) மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். எனவே இந்த பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு நாட்டு மக்களிடம் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த நாடாளுமன்ற கூட்டத்தில் நீட் தேர்வு மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
பட்ஜெட்டில் எதிர்பார்க்கும் அம்சங்கள் என்ன.?
இதனிடையே இந்தியாவில் பல மாநிலங்களில் பாஜக கூட்டணிக்கு எம்பி சீட் கிடைத்த நிலையில் தமிழகத்தில் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. இந்த நிலையில் தமிழகத்திற்கு பாஜக அரசு புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள 2024ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையில், மூன்று ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் இருக்கும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவுச் சாலைத் திட்டத்திற்கான ஒப்புதல்.
நிதி ஒதுக்கீடு செய்யும்- ஸ்டாலின் நம்பிக்கை
பத்தாண்டுகளாக வருமான வரிச் சுமை குறைக்கப்படும் என்ற நடுத்தரக் குடும்பங்களின் எதிர்பார்ப்பு. கோவை மற்றும் மதுரை மெட்ரோ இரயில் திட்டங்களுக்கான ஒப்புதல். தமிழ்நாட்டில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள மற்றும் புதிய ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்திடப் போதிய நிதி ஒதுக்கீடு. கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டங்களின்கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான செலவு வரம்பை உயர்த்துதல் உள்ளிட்ட தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை ஒன்றிய அரசு நிறைவு செய்யும் என்று நம்புகிறேன் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.