நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த 8 உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகளைப் பார்த்து பாஜக அஞ்சுவது ஏன் என கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்திய எல்லையில் சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக குறிப்பிட்ட ராகுல் காந்தியின் பேச்சுக்கு பாஜக, கூட்டணிக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதனால் காங்கிரஸ், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்ட நிலையில் மாணிக்கம் தாகூர் உட்பட 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “மாண்புமிகு மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் எனது சகோதரருமான திரு. ராகுல் காந்தி அவர்கள் எழுப்பும் கேள்விகளைக் கண்டு ஒன்றிய பா.ஜ.க. அரசு ஏன் அஞ்சுகிறது?

அவை உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கவும், நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்கள் குறித்து அவைக்குத் தெளிவுபடுத்தவும் அரசு முன்வர வேண்டும்.

எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 8 நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்துள்ளதற்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். உடனடியாக அவர்களது இடைநீக்கத்தைத் திரும்பப்பெற்று, முக்கியத்துவம் வாய்ந்த நாட்டின் பிரச்சினைகள் குறித்து அவர்கள் அவையில் பேசுவதற்கான ஜனநாயக உரிமை காக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.