தமிழுக்கும் - தமிழினத்திற்கும் - தமிழ்நாட்டுக்கும் அடுக்கடுக்காக துரோகங்களை செய்துவிட்டு, துரோகத்திற்கு ஏற்ற கொத்தடிமைகள் அனைவரையும் ஒன்று சேர்த்து, அவர்கள் முதுகில் ஏறி வருகிறது, பா.ஜ.க.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு நிறைவு விழாவில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், ''நமக்குள் இருக்கும் நட்பு என்பது, தேர்தல் அரசியலை கடந்த நட்பு. நம்முடைய நோக்கங்களுக்கு எதிராக இருப்பவர்கள் நமது ஒற்றுமையைச் சிதைக்க முடியுமா என்று பார்த்தார்கள். நம்முடைய இந்தத் தோழமையை எந்தச் சக்தியாலும் பிரிக்க முடியாது. ஏன் என்றால், இது எண்ணிக்கைக்காக அமைந்த கூட்டணி அல்ல; எண்ணங்களுக்காக அமைந்திருக்கும் கூட்டணி.

பாஜகவின் ஆக்டோபஸ் கொடுங்கரங்கள்

பாசிச பா.ஜ.க., தன்னுடைய ஆக்டோபஸ் கொடுங்கரங்களை அனைத்துப் பக்கமும் நீட்டி, கபளீகரம் செய்து கொண்டிருக்கிறது. பா.ஜ.க. எவ்வளவு ஆபத்தானது எவ்வளவு குறுகிய சிந்தனை எந்தளவிற்குப் பன்முகத்தன்மைக்கு எதிரானது என்றால், அவர்களைப் பொறுத்தவரைக்கும், ஒரு நாடு என்றால், அதில் ஒரு மதம் ஒரு மொழி ஒரு பண்பாடு - ஒரே ஒரு தலைமைதான் இருக்க வேண்டும். மாநிலங்களின் வளத்தைச் சூறையாடி, ஒன்றியத்தில் குவிக்கிறார்கள்.

மாநில அரசுகளுக்கு எந்த அதிகாரமும் இருக்கக் கூடாது என்று நினைக்கிறார்கள். மதச்சார்பின்மை - சோசலிசம் - சமநீதி - சமூகநீதி - பொதுவுடைமை -பொது உரிமை உள்ளிட்ட சொற்களைக் கேட்டாலே, பா.ஜ.க.வினருக்குக் கசக்கிறது. இந்தச் சொற்களை எல்லாம், ஆட்சியில் இருந்து மட்டுமல்ல அகராதியில் இருந்தே அழிக்க வேண்டும் என்று துடியாகத் துடிக்கிறார்கள்.

எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. நினைத்தது போன்று, 400 இடங்கள், 370 இடங்கள் என்று வெற்றி பெற்றிருந்தால், இப்போது இருப்பதைவிட நிலைமை இன்னும் மோசமாகி இருக்கும். இந்தியாவில் இருக்கும் ஜனநாயகச் சக்திகள் அனைத்தையும் இன்றைக்கு இணைத்து, இந்தியா கூட்டணியை உருவாக்கி, பா.ஜ.க.வின் வேகத்தைக் குறைத்திருக்கிறோம். ஆனாலும், பெரும்பான்மை இல்லாத நேரத்திலேயே, பா.ஜ.க. தன்னுடைய கொடூரமான நகங்களைப் பயன்படுத்தி, ஜனநாயகத்திற்கு காயங்களை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது. இந்தச் சூழலில், அனைவரும் குறிப்பிட்ட நாம் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும்.

மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்

வரப்போகும் சட்டமன்றத் தேர்தல், தமிழ்நாட்டுக்கும் N.D.A. கூட்டணிக்கும் நடக்கும் தேர்தல். இதை மக்கள் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். தமிழுக்கும் - தமிழினத்திற்கும் - தமிழ்நாட்டுக்கும் அடுக்கடுக்காக துரோகங்களை செய்துவிட்டு, துரோகத்திற்கு ஏற்ற கொத்தடிமைகள் அனைவரையும் ஒன்று சேர்த்து, அவர்கள் முதுகில் ஏறி வருகிறது, பா.ஜ.க.

அதிமுக பாஜகவின் கிளை அமைப்பு

E.D. - I.T. - C.B.I. வழக்குகளைக் காட்டி மிரட்டி அமைக்கப்பட்டுள்ள அந்தத் தேர்தல் கூட்டணியின், தேர்தல் பரப்புரைக்கு வந்த மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள், அ.தி.மு.க. என்ற பெயரையே சொல்லவில்லை. ஏன், அவர் அ.தி.மு.க.வின் பெயரைச் சொல்லவில்லை தெரியுமா? ஏன் என்றால், அ.தி.மு.க. என்பது தனிக்கட்சி கிடையாது. பா.ஜ.க.வின் கிளை அமைப்பு. அந்தக் கிளை அமைப்பைச் சேர்ந்த பழனிசாமி அவர்கள், மோடி கொடுக்காத வாக்குறுதிகள் அனைத்தையும் இப்போது கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

இபிஎஸ்ஸின் முதலாளிகளை மிஞ்சும் பர்ஃபார்மென்ஸ்

முக்கியமாக, மகாத்மா காந்தி பெயரிலான நூறு நாள் வேலைத் திட்டத்தில், 50 நாட்கள்கூட வேலையைத் தராமல், ஒன்றிய பா.ஜ.க. அரசு எப்படியெல்லாம் சீரழித்தது என்று, நாட்டுக்கே நன்றாகத் தெரியும். இப்போது, தேசத்தந்தை காந்தியின் பெயரையே அழித்திருக்கும் அந்தத் திட்டத்தில், 125 நாட்கள் வேலை தரப்போவதாக பா.ஜ.க. சொல்கிறது. ஆனால் பழனிசாமி அவர்கள், 150 நாட்கள் வேலை தருவோம் என்று, முதலாளிகளை மிஞ்சும் பர்ஃபார்மென்ஸ்-ஐ இன்றைக்குச் செய்து கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் எப்படியும் தோல்வி உறுதி என்ற காரணத்தினால், பா.ஜ.க. அரசும் இந்தப் பட்ஜெட்டிலும் நம்மைப் புறக்கணித்திருக்கிறார்கள்.

டபுள் எஞ்சின் என்பது டப்பா எஞ்சின்

இந்த லட்சணத்தில், நேரடியாக பா.ஜ.க. ஆட்சி என்று சொல்ல கூச்சப்பட்டு, டபுள் எஞ்சின் ஆட்சி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பா.ஜ.க. சொல்லும் டபுள் எஞ்சின் என்பது டப்பா எஞ்சின் என்று நாட்டு மக்கள் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள். இங்கு பா.ஜ.க.வின் டப்பா எஞ்சினுக்கு வேலையே கிடையாது. இதே உணர்வைத்தான், மக்களின் முகங்களில் மகிழ்ச்சியாக நான் பார்க்கிறேன்.

கருத்து கணிப்பை விட ஆதரவு அதிகம் இருக்கும்

அண்மையில், இந்தியா டுடே பத்திரிகையும் -சி வோட்டர்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில், நம்முடைய கூட்டணி 45 விழுக்காடு ஆதரவுடன் முன்னிலையில் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். நான் உறுதியாகச் சொல்கிறேன், நமக்கான ஆதரவு நிச்சயம் இன்னும் கூடுதலாகத்தான் இருக்கும். ஒற்றுமை இருக்கும் இடத்தில் பா.ஜ.க.வின் பாசிச எண்ணம் ஒருபோதும் பலிக்காது'' என்று கூறியுள்ளார்.