மாணவர்களுக்கு குட் நியூஸ்.! அதிரடி காட்டும் ஸ்டாலின்- இனி அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் காலை உணவு
பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டம் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து இன்று காமராஜர் பிறந்தநாளையொட்டி அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார்.
தமிழக அரசின் மக்கள் நல திட்டங்கள்
திமுக அரசு தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக மகளிர் இலவச பேருந்து, மகளிர் உரிமை தொகை, புதுமை பெண் திட்டம். நான் முதல்வன் திட்டம் என பல திட்டங்களை செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் மாணவர்களுக்கு உதவிடும் வகையிலும் படிப்பில் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
காலை உணவு சாப்பிடாமல் பள்ளிகளுக்கு வரும் குழந்தைகளுக்கு உதவிடும் வகையில் சத்தான உணவுகளோடு காலை உணவு திட்டம் கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகள் அனைத்திலும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் பயன்பொறும் வகையில் தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் 1,545 பள்ளிகளைச் சேர்ந்த 1 லட்சத்து 14 ஆயிரம் குழந்தைகள் பயன்பெற்றனர்.
காலை உணவு திட்டம்
இந்த திட்டம் மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டது அதன் படி, 30 ஆயிரத்து 992 அரசு தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 18 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் காலை உணவைச் சூடாகவும், சுவையாகவும் வழங்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனையடுத்து அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என தமிழக சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.
பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளையொட்டி திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம், கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் இந்த திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறார். இன்று தொடங்கப்படும் திட்டத்தின் மூலம் 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 2 லட்சத்து 23 ஆயிரத்து 536 குழந்தைகள் பயனடைவார்கள் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.