Asianet News TamilAsianet News Tamil

குறுகிய காலத்தில் எதிர்பாராத அதி கனமழை… கணிக்க தவறிய வானிலை மையம்!!

சென்னையில் நேற்று இரவு முதல் மழை பெய்து வரும் நிலையில் மேலும் கனமழை தொடரும் என தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

Chennai Meteorological Center about rain
Author
Chennai, First Published Nov 7, 2021, 2:52 PM IST

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையே நவம்பர் 9 ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில் சென்னை நேற்று இரவு தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் வெள்ள நீர் தேங்கியது. மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் கனமழை தொடரும் என தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சென்னை டிஜிபி அலுவலகத்தில் இதுவரை 23 செ.மீ மழை பதிவாகியுள்ளதாகவும் கடந்த 24 மணி நேரத்தில் 3 இடங்களில் அதி கனமழையும் 6 இடங்களில் மிக கனமழையும் 26 இடங்களில் கனமழையும் பெய்துள்ளதாக தெரிவித்துள்ளார். அடுத்த 2 தினங்களுக்கு பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறிய பாலச்சந்திரன், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், புதுவை, காரைக்கால் அகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும் சில நேரங்களில் அதிகனமழையும் பெய்யக்கூடும் என்றும் புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கரூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, கோயம்பத்தூர், கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார். தென்மேற்கு வங்கக்கடல், தமிழக கடற்கரை மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரை பகுதிகளில் 40 முதல் 60 வரை காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இன்றும், நாளையும் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.

Chennai Meteorological Center about rain

தொடர்ந்து பேசிய பாலச்சந்திரன், நவம்பர் 9 ஆம் தேதியையொட்டி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும் இது தொடர்ந்து வலுப்பெற்று வட தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்றும் கூறிய அவர், இதன் காரணமாக 10, 11 ஆகிய தேதிகளில் வட தமிழக கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிகன மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளார். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு கன முதல் மிக கனமழையும், சில சமயங்களில் அதிகன மழையும் பெய்யக்கூடும் என்று கூறிய அவர், வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரையில் கடந்த 1 ஆம் தேதி முதல் இன்று வரை பதிவான மழையின் அளவு, 33 செ.மீ என்றும் இந்த காலக்கட்டத்தின் இயல்பு அளவு 23 செ.மீ என்றும் இது இயல்பை விட 43 சதவீதம் அதிகம் என்றும் தெரிவித்துள்ளார். மிகக் குறுகிய காலத்தில் அதிகன மழை பெய்துள்ளது என்றும் அதனை கணிப்பது சற்று கடினமானது என்றும் தெரிவித்த அவர், சென்னையில் இரவு 10 மணி வரை 3 செ.மீ மழையும், 1 முதல் 1.45 மணி வரை 6 செ.மீ மழையும், அதன்பிறகு 5 முதல் 6 மணி வரை 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios