விளம்பரம் வேண்டுமானால் படங்களில் நடிக்கலாம்: உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு டோஸ்
உணவகங்களில் ஆய்வுக்கு செல்லும் போது ஊடகங்களை அழைத்துச் செல்லக் கூடாது என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் அச்சங்கத்தின் செயலாளர் ராஜ்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் உணவு தரக்கட்டுப்பாட்டு அதிகாரியான சதீஷ்குமார் உணவகங்களில் ஆய்வு மேற்கொள்ள வரும்போது சட்டத்தை முறையாக பின்பற்றாமல் தனது சொந்த விளம்பரத்திற்காக, ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் நேரலை செய்து வருகிறார்.
உணவின் தரம் குறித்து ஆய்வு செய்து அது கெட்டுப்போனதா? பயன்படுத்தும் அளவில் தான் உள்ளதா? என்பதை உறுதி செய்யும் முன்னரே அவற்றை வெளியிடுவதால் எங்கள் உணவகங்களின் நற்பெயர், எங்கள் கடின உழைப்பு பாதிக்கப்படுகிறது. எனவே ஆய்வுக்கு வரும்போது முறையாக சட்ட விதிகளை பின்பற்ற உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
ஆம்னி பேருந்துகளில் கட்டண உயர்வு... வெளியானது புதிய விலை பட்டியல்!!
மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அரசு கொடுத்த அதிகாரத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது. உணவின் தரத்தை ஆராய்ந்து அது பயன்படுத்தும் நிலையில் உள்ளதா? இல்லையா? என்பதை உறுதி செய்த பின்னரே உணவகம் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளது. அப்படி இருக்கும் பட்சத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வுக்கு செல்லும்போதே ஊடகங்களை எவ்வாறு அழைத்துச் செல்லலாம்?
உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு விளம்பரம் தேவைப்படும் பட்சத்தில் திரைத்துறையில் நடிக்கலாம். அதை விடுத்து தங்களுக்கான அதிகாரத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்ட நீதிமன்றம் இது தொடர்பாக பதில் அளிக்க உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிவருகின்ற 17ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் உணவகங்களில் மேற்கொள்ளப்படும் ஆய்வினை நேரலை செய்யவும் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வேண்டுமென்றால் துறை சார்ந்த புகைப்படை கலைஞரை உடன் அழைத்துச் சென்று ஆய்வு மேற்கொள்ளலாம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.