தமிழகத்தில் பல இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி உள்ளது. இந்நிலையில், வானிலை மையம் மழைக்கு நாள் குறித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில கோடை வெயிலை மிஞ்சும் அளவுக்கு வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பல்வேற இடங்களில் 100 டிகிரி தாண்டி வெயில் சுட்டெரித்து வருவதால் பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் செல்வதை முற்றிலுமாக தவிர்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று 5 இடங்களில் வெயில் சதம் அடித்தது. அதாவது மதுரை விமான நிலையம் 106.7 டிகிரி, மதுரை 104.36 டிகிரி, ஈரோடு 101.48 டிகிரி, பாளையங்கோட்டை மற்றும் பரங்கிப்பேட்டையில் 100.4 டிகிரி பாரான்ஹீட் என வெயில் பதிவாகி இருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் மழைக்கு வானிலை மையம் நாள் குறித்துள்ளது.
சென்னை வானிலை மையம்
இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: மேற்கு திசை காற்றின் வேறு மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் 23ம் தேதி 27ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது மதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு
இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் வரை உயரக்கூடும்.
அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு
இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதேபோல் அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை வானிலை நிலவரம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29°செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மழையின் அளவு
கடந்த 24 மணி நேரத்தில் சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம், பள்ளிக்கரணையில் 5 செ.மீ., மணலி, மடிப்பாக்கம், கண்ணகி நகர், மேடவாக்கம், ஈஞ்சம்பாக்கம், சேலம் மாவட்டம் சந்தியூர் 4 செ.மீ., கோவை மாவட்டத்தில் சின்கோனா, உபாசி, சின்னக்கல்லாறு, சோலையாறு, வால்பாறை, சென்னை கத்திவாக்கம், ஆகிய இடங்களில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
