திருவானைக்காவல் யாத்ரீ நிவாஸ் எதிரே கார் ஓட்டிக் கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து கொள்ளிடம் ஆற்றில் கார் பாய்ந்தது. காரில் இருந்த இருவரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

திருச்சி கார் விபத்து

கரூர் மாவட்டம் பரமத்தி வேலூரை சேர்ந்தவர் ராஜா (33). இவர் திருமண விழாவில் பங்கேற்பதற்காக திருவானைக்காவல் வந்திருந்தார். அங்கு அவரது நண்பர் திருச்சி மாவட்டம் புள்ளம்பாடியை சேர்ந்த பாலகிருஷ்ணன்(32) என்பவரும் வந்திருக்கிறார். இருவரும் யாத்ரீ நிவாஸ் எதிரே கொள்ளிடக்கரையில் ஹெலிபேட் தளத்தில் இன்று மாலை கார் ஓட்டிக் கொண்டிருந்தனர்.

கொள்ளிடம் ஆற்றில் கவிழ்ந்த கார்

அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் அதிவேகத்தில் சென்று அங்கு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் மீது மோதி, சுமார் 50 அடி பள்ளத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றுக்குள் பாய்ந்தது. காரில் இருந்த இருவரும் படுகாயமடைந்தனர். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த கிரிக்கெட் விளையாடிய நபர்கள் ஆற்றுக்குள் இறங்கி இருவரையும் மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

போலீஸ் விசாரணை

இதுதொடர்பாக ஸ்ரீரங்கம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இவர்களை போலவே திருமண விழாவிற்கு வந்து, கார் மோதிய விபத்தில் படுகாயமடைந்த சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த திவாகரன் (22), ராயபுரத்தை சேர்ந்த ஜெயபிரகாஷ் (22) ஆகிய இருவரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். கொள்ளிடம் ஆற்றில் முழங்கால் அளவே தண்ணீர் ஓடுவதால் காரில் இருந்த இருவரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் மதுபோதையில் இருந்தார்களா என விசாரணை நடைபெற்று வருகிறது.