திருவாரூர் மாவட்டத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட இருவர், அவரை ஆற்றில் மூழ்கடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TTV Dhinakaran: திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே பெருமாளகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி சுதா(40). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இந்நிலையில், சுதா பாண்டவையாறு கரையில் நேற்று மதியம் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த முருகன்(43), அஜித் குமார்(30) ஆகியோர் சுதாவிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதுடன், அவரை அருகில் இருந்த பாண்டவையாற்றில் நீரில் மூழ்கடித்துவிட்டு, அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

நீரில் மூழ்கடித்து கொலை

இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் சுதாவை மீட்டு, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக கொரடாச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகன், அஜித் குமார் ஆகியோரைக் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் எஞ்சியிருக்கும் ஆட்சிக்காலத்திலாவது பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்திட வேண்டும் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.

டிடிவி.தினகரன் அதிர்ச்சி

இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி பகுதியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பெண் ஒருவரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட முற்பட்ட போது அப்பெண் கத்திக் கூச்சலிட்டதால் ஆற்றில் அழுத்திக் கொலை செய்யப்பட்டதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

பெண்களுக்கு எதிராக அரங்கேறும் பாலியல் வன்கொடுமை

கடந்த சில தினங்களில் மட்டும் வேலூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண், காஞ்சிபுரம் அருகே 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி, கிருஷ்ணகிரியில் 10 வயது சிறுமி, கன்னியாகுமரியில் டியூசன் சென்ற மாணவி, திருச்செந்தூரில் 9ஆம் வகுப்பு பயிலும் சிறுமி என பெண்கள் பலர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் நாள்தோறும் வெளியாகும் பெண்களுக்கு எதிராக அரங்கேறும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் தொடர்பான செய்திகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பது தமிழகத்தில் பெண்கள் வாழவே முடியாதா? என்ற கேள்வியை எழுப்பும் வகையில் அமைந்திருக்கிறது.

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்க

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களின் ஈடுபடுவோருக்கு வழங்கப்படும் தண்டனைகள் கடுமையான பின்பும், அக்குற்றங்கள் தொடந்து அதிகரித்து வருவது அச்சட்டத்தின் மீது குற்றவாளிகளுக்கு துளியளவும் அச்சத்தை ஏற்படுத்தவில்லை என்பதை வெளிக்காட்டுகிறது. மேலும் செயல்பட முடியாத நிலையில் இருக்கும் காவல்துறையால் இதுபோன்ற குற்றச்சம்பவங்கள் தொடந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. எனவே, பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, எஞ்சியிருக்கும் ஆட்சிக்காலத்திலாவது பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்திட வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.